பாஜ காலை வார காத்திருக்கும் எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நேற்று வந்தவங்களுக்கெல்லாம் முக்கியத்துவமான்னு இலைகட்சிக்காரங்க அதிருப்தி குரல் குடுத்திருக்காங்களாமே’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல இலைக்கட்சியில் உள்கட்சி புகைச்சல் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுதாம். இதனால தலைமை யார் என்ன தவறு செஞ்சாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறதாம். வேற கட்சிக்கு தாவிடுவாங்களோன்னு சேலத்துக்காரர் பயத்துல இருக்காராம். பல வருஷமா கட்சியில உழைச்சி ஓடா தேஞ்சிபோன தொண்டர்களை எல்லாம் கண்டுக்காம, குக்கர் கட்சியில இருந்து சமீபத்துல இலைக்கு தாவிய நபர்களை வெச்சி அரசியல் நடத்துறாங்களாம். குக்கர் கட்சியில இருந்து வந்தவங்க, நகரத்துல ஆங்காங்கே போஸ்டர், பேனர்களை எல்லாம் பெரிய சைசில் அடித்து ஒட்டி வர்றாங்களாம். அவர் யார்னே தெரியாத நிலையில, போஸ்டர் இஷ்டத்துக்கு ஒட்டி, இலைகட்சிய வெயிலூர்ல நாங்க தான் கட்டி காப்பாத்துறோமுன்ற மாதிரி செயல்படுறாங்களாம். இதுக்கெல்லாம் டிஸ்ட்ரிக் செக்ரட்ரி கொடுக்குற இடம் தான் காரணம். நேற்று வந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு, சொந்த கட்சிக்காரங்களை புறக்கணிக்குறதான்னு இலைகட்சி தொண்டர்கள் அதிருப்தியில இருக்காங்களாம். இதெல்லாம் வர்ற தேர்தல்ல எதிரொலிக்கும்னு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஸ்லீப்பர் செல் கதையா இருக்காம் தேனிக்காரர் கதை…’’ என்று பீட்டர் மாமா சொல்ல அதை ஆமோதித்தார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரை வெறுப்பேத்த வேண்டும் என்றால் தேனிக்காரருக்கு கொள்ளை பிரியமாம். மம்மியின் முதல்வர் பதவியை பிடிப்பதில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கட்சியை தேனிக்காரருக்கும், ஆட்சியை சேலத்துக்காரருக்கும் என பிரித்து ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்களாம். கொடுத்த வேலையையும் தாண்டி சேலத்துக்காரர் சிறப்பா செஞ்சிட்டார். ஆனா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சரியாக பயன்படுத்தாமல் மிச்சர் சாப்பிடுவதிலேயே குறியா இருந்ததினால் எல்லாம் பறிபோன நிலையில் தேனிக்காரர் வேட்டி கட்ட கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்களே மனமொடிஞ்சி சொல்லிக்கிட்டிருக்காங்க.

இந்த நிலையில்தான், நான் வாய் திறந்தால் சேலத்துக்காரர் டெல்லி திகார் ஜெயிலுக்கு போயிடுவார் என கூறும் தேனிக்காரர், அந்த ரகசியத்தை சரியான நேரத்தில் சொல்லுவேன்னு போகுமிடமெல்லாம் சொல்லிக்கிட்டே போறாராம். கொடநாடு ரகசியத்தை சொன்னால் கோவை ஜெயிலுன்னு சொல்லலாம். திகாருன்னா டெல்லிக்கு தானே போகணும்? அப்படின்னா என்னவா இருக்கும்? என்ற பல்வேறு கேள்விகளோட இலைக்கட்சி தொண்டர்கள் கேட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா எல்லாமே டுமீல்னு இலைக்கட்சிக்காரரின் அடிப்பொடிகள் சொல்றாங்க.
இப்படித்தான் ஆட்சியில இருக்கும்போது ஸ்லீப்பர்செல் அங்க இருக்காங்க, இங்க இருக்காங்க, இப்போது வந்திருவாங்கன்னு குக்கர்காரர் சொல்லிக்கிட்டே இருந்தாரு. கடைசிவரை ஸ்லீப்பர் செல் வெளியே வரவே இல்லை. அந்த பார்முலாவைத்தான் தேனிக்காரர் திகார் ஜெயிலுன்னு சொல்றாரு. தனது இருப்பிடத்தை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் தந்திரமுன்னு சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க. அதே நேரத்துல புலி வருது புலி வருதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் நிஜ புலி வரும்போதுதான் தேனிக்காரர் யாருன்னு தெரியுமுன்னு அவரோட அடிப்பொடிகள் உற்சாகமா சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில பாஜ காலை வார காத்திருக்கும் எம்எல்ஏக்கள பத்தி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில தேஜ கூட்டணி ஆட்சியில் சபாநாயகர், 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேர் பாஜ எம்எல்ஏக்களா இருக்காங்க. இது தவிர சுயேச்சையா வெற்றி பெற்ற 3 பேரும் தாமரையை ஆதரிக்கிறாங்க. கட்சி கூட்டத்தில எல்லாம் 3 சுயேச்சைகளும் தவறாமல் கலந்துக்குறாங்க. அதேபோல 3 நியமன எம்எல்ஏக்கள் என தாமரை புதுச்சேரி சட்டசபையில் பலத்தை 12 ஆக கூட்டிவச்சிருக்குது. இது போன்ற சூழல்ல பதவி கிடைக்கும்னு எதிர்பார்த்திருக்கும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களும், தாமரை எம்எல்ஏக்களும் வாரியம் கிடைக்கும் என வாயை பிளந்து காத்திருக்காங்களாம்.

ஆனா புல்லட்சாமியோ, வாரியங்கள் எல்லாம் நஷ்டத்தில் இருக்குன்னு தட்டி கழிச்சி வாறாராம். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல்ல தாமரை வேட்பாளர் தேடும் படலமும் நடக்குதாம். இது குறித்து கருத்து கேட்க மேலிடப்பொறுப்பாளர் சுரானா, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைச்சிருக்கார். இதை பயன்படுத்தி, எங்களை ஏன் கூப்பிடுறீங்க, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ருசிப்பவர்களை வச்சிக்கிட்டு தேர்தலை சந்திங்க, நாங்கல்லாம் எதுக்கு? ஆதரவு தரும் சுயேச்சைகளுக்கும் நம்மால எதுவும் செய்யமுடியல்லை. லாபம் தரும் வாரியங்கள்லாம் இருக்கத்தானே செய்யுது. எல்லாமுமா நஷ்டத்தில இருக்கு. தாமரை தலைமை நினைச்சா ஒரு மணி நேரத்தில் புல்லட்சாமியிடம் வாரியத்தை வாங்கிடலாம்னு எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாங்களாம். தேர்தல் நெருங்கிடுச்சி, இப்போ எந்த எம்எல்ஏக்களை வச்சி ஓட்டு கேட்பீங்கன்னு சொல்லிட்டே அவங்க எல்லாம் வெளியேறியிருக்காங்க. இது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த மாவட்டத்துலயே தேனிக்காரருக்கு இவ்வளவுதானான்னு ஆதரவாளர்கள் சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனீபீ மாவட்டத்தில் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதேபோல தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த கூட்டங்களில் அவருடன் எப்போதும் வைத்தியானவர் உட்பட முக்கிய ஆதரவாளர்களும் கலந்துக்குறாங்க. மற்ற மாவட்டங்களை விட, சொந்த ஹனிபீ மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு ஆட்களை அதிகம் காட்ட வேண்டுமென்பதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெண்களுக்கு சேலை, குடம், பணம் கொடுத்து திரட்டி கூட்டம் நடந்த மண்டபத்திற்கு அழைத்து வந்திருக்காங்க. கூட்டம் 4 மணிக்கு தொடங்கும்னு கூறிய நிலையில், தேனிக்காரர் பேசும்போது இரவு 7 மணி ஆகிவிட்டது. இதனால், கொடுத்த பணத்திற்கு இதுக்கு மேல இருக்கமுடியாது என கூறி விட்டு வந்த பெண்கள், தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை சத்தமிட்டு வந்த வாகனங்களில் சென்று அமர்ந்து விட்டனர். தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்ட அரங்கம் வெறிச்சோடியது. இதனால் தேனிக்காரர் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் மண்டை காய்ந்தனர். 700 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் பாதி இருக்கைகள் காலியாக இருந்தது. இதனால் தேனிக்காரரின் உடன் வரும் முக்கிய ஆதரவாளர்கள், ஹனிபீ மாவட்டத்திலேயே இவருக்கு இவ்வளவுதானா என்றபடி சென்றனராம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !