பாஜ-மஜத கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவாரா? ராஜ்யசபா தேர்தல் இன்று வாக்குப்பதிவு: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவுபாஜ-மஜத கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவாரா? ராஜ்யசபா தேர்தல் இன்று வாக்குப்பதிவு: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் நான்காவது வேட்பாளராக யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இன்று நடக்கிறது. மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக பாஜவை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ராஜிவ்சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் எல்.அனுமந்தையா, ஜே.சி.சந்திரசேகர், சையத் நாசீர் உசேன் ஆகிய நான்கு பேர் கடந்த 2018 ஏப்ரல் 3ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதி முடிகிறது. காலியாகும் நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அஜய்மக்கான், சையத் நசீர் உசேன் மற்றும் ஜி.சி.சந்திரசேகர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாராயண சா.பாண்டே, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் குபேந்திரரெட்டி ஆகியோர் களத்தில் உள்ளனர். நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 5 பேர் போட்டியில் இருப்பதால் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர், முதல்வர் உள்பட 224 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவு அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர் அடிப்படையில் காங்கிரஸ் 3, பாஜ சார்பில் 1 உறுப்பினர் தேர்ந்தெடுக்க முடியும். மஜத-பாஜ கூட்டணி சார்பில் குபேந்திரரெட்டி களத்தில் உள்ளதால், அவர் வெற்றிபெற வேண்டுமானால் காங்கிரசில் உள்ள சில எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கவேண்டும். தேர்தலில் வெற்றி பெற ஒரு உறுப்பினருக்கு 45 பேர் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 134 (ராஜா வெங்கடப்பா நாயக் மரணம் காரணம் 1 உறுப்பினர் பலம் குறைந்தது) மற்றும் தர்ஷன் புட்டண்ணையா (நஞ்சன்கூடு), லதா மல்லிகார்ஜுன் (ஹுவின அடகலி) மற்றும் புட்டசாமிகவுடா (கவுரிபிதனூர்) ஆகிய மூன்று சுயேட்சைகள் மற்றும் கேஆர்பிபி உறுப்பினர் ஜனார்தனரெட்டி ஆகிய 4 பேர் ஆதரவு மூலம் 138 உறுப்பினர்கள் பலம் இருப்பதால் 3 பேர் சுலபமாக வெற்றி பெற முடியும். பாஜவுக்கு 66 உறுப்பினர் பலம் உள்ளது. அக்கட்சி வேட்பாளருக்கு 45 பேர் ஆதரவு கொடுத்தால் மீதியுள்ள 21 பேருடன் மஜதவுக்கு உள்ள 19 பேர் சேர்ந்தால் 39 பேரின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் அவர் வெற்றிபெற 6 பேர் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு மதிப்பு பார்முலா: மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் பதிவு செய்யும் வாக்கு மதிப்பு 100 ஆக உள்ளது. நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஒரு உறுப்பினருக்கான வாக்கு மதிப்பு 4,481 ஆகும். அதனடிப்படையில் ஒரு வேட்பாளருக்கு 45 பேர் வாக்களிக்க வேண்டும்.

மாநில சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் இருந்தபோது, ஒருவரின் வாக்கு மதிப்பு 4,481 ஆக இருந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ராஜா வெங்கடப்பா நாயக் காலமாகியதால், வாக்கு மதிப்பு 4,461ஆக குறைந்துள்ளது. குபேந்திர ரெட்டி வெற்றிபெற வேண்டுமானால், மேற்கண்ட பார்முலா அடிப்படையில் வாக்குபெற வேண்டும். பாஜ-மஜத கூட்டணியிடம் அதற்கான வாக்குகள் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மையாக உள்ளது. மூன்று கட்சிக்கும் குறுக்கு வாக்கு: சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு இருக்கும் உறுப்பினர்கள் அடிப்படையில் பார்க்கும்போது காங்கிரஸ்-3 மற்றும் பாஜ-1 என்ற வகையில் சுலபமாக வெற்றிபெற முடியும். ஆனால் 5வது வேட்பாளராக பாஜ-மஜத கூட்டணி குபேந்திரரெட்டியை களத்தில் நிறுத்தியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்கள் குபேந்திரரெட்டியை ஆதரிக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் பாஜ-மஜத கூட்டணி காங்கிரஸ் தரப்பில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சி கூடாரத்தில் இருந்து சில எம்எல்ஏகள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும்போது மூன்று கட்சிக்கும் தங்கள் கட்சி எம்எல்ஏகள் குறுக்கு வாக்களிப்பார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.

பாஜ-மஜத தீவிர முயற்சி: பாரதிய ஜனதா மற்றும் மஜத கூட்டணி சார்பில் களத்தில் நிறுத்தியுள்ள குபேரந்திர ரெட்டியை வெற்றி பெற செய்வதற்கான இறுதி கட்ட முயற்சியில் இரு கட்சி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா உள்பட தலைவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்களின் ஆதரவு பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரியவருகிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் விரிக்கும் வலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிக்குவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. துணைமுதல்வர் ராஜதந்திரம்: மாநிலங்களவை தேர்தலில் பாஜ-மஜத கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார். பாஜவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்த கல்யாண கர்நாடக பிரகதி கட்சி (கேஆர்பிபி) கட்சி எம்எல்ஏ ஜனார்தனரெட்டியை காங்கிரஸ் பக்கம் இழுப்பதில் முதல் வெற்றியை சாதித்துள்ளார். அதே சமயத்தில் மஜதவில் இருந்தும் மூன்று எம்எல்ஏகளை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க செய்யும் முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்