பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நோட்டீஸ்; ரூ.4 கோடி வழக்கில் ‘ஹார்ட் டிஸ்க்’ மாயம்: சுப்ரீம் கோர்ட்டில் சிபிசிஐடி வாதம்

புதுடெல்லி: பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தொடர்பான ₹4 கோடி சிக்கிய வழக்கில் ‘ஹார்ட் டிஸ்க்’ மாயமாகி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ் என்பவரிடம் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால், கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா?. 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போய் உள்ளது. அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

நாகை- இலங்கை கப்பல் செப்.15 வரை வாரத்தில் 3 நாள் மட்டுமே சேவை

என்சிசி முகாம் நடத்தி மாணவி பலாத்காரம் நாம் தமிழர் நிர்வாகி பற்றி திடுக்கிடும் தகவல்கள்: போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது அம்பலம்

யானை மிதித்து பெண் சாவு