பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி; அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

சண்டிகர்: பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் ஒரு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அட்டவணை வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் களமிறங்கி உள்ளன.

அரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுக்குமா? என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ‘டைம்ஸ்நவ்’ மற்றும் ‘மேட்ரிஷ்’ ஆகிய நிறுவனங்கள் நடத்திய சர்வேயின்படி, பாஜக கூட்டணி அதிகபட்சமாக 35.2 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 31.6 சதவீதமும், ஜேஜேபி 12.4 சதவீதமும், மற்றவை 20.8 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்திற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

பாஜக மற்றும் கூட்டணிக்கு 37 முதல் 42 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 33 முதல் 38 இடங்களும், ஜேஜேபி-க்கு 3 முதல் 8 இடங்களும், மற்றவை கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு 7 முதல் 12 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சூழல் ஏற்படும்பட்சத்தில், இம்முறையும் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபி கட்சிக்கு ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு இருக்கும். முதல்வராக நயாப் சிங் சைனியின் செயல்பாடு எப்படி உள்ளது? என்று கேள்விக்கு 40 சதவீதம் வாக்காளர்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், 21 சதவீதம் பேர் சராசரியாகவும், 24 சதவீதம் பேர் சரியில்லை எனவும், 15 சதவீதம் பேர் கருத்து சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். துஷ்யந்த் சவுதாலா பற்றி கேட்டபோது, 24 சதவீதம் பேர் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாஜக கூட்டணியில் அவர் சேருவார் என்றும், 44 சதவீதம் பேர் காங்கிரஸுடன் செல்லலாம் என்றும், 22 சதவீதம் பேர் எந்தக் கூட்டணியிலும் அவர் இருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் வேட்பாளராக யார் இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, அதிகபட்சமாக பாஜகவின் நைப் சிங் சைனிக்கு 29 சதவீதமும், காங்கிரசின் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு 27 சதவீதமும், ஜேஜேபி-யின் துஷ்யந்த் சவுதாலாவுக்கு 9 சதவீதமும் ஆதரவு கிடைத்தது. விவசாயிகள் பிரச்னை, அக்னிவீர் திட்டம் ஆகியவை அரியானா தேர்தலில் பெரிய பிரச்னையாக இருக்கும் என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர். கடந்த முறை அரியானாவில் நடந்த பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், ஜேஜேபி மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

விவசாயிகள் போராட்டம் வெடித்த போது, பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி வெளியேறியது. தற்போது சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சியை நடத்தி வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 இடங்களை பாஜகவும், 5 இடங்களை காங்கிரசும் கைப்பற்றியது. எனவே இந்த சட்டசபை தேர்தலில் அரியானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் போராட்டம் வெடித்த போது, பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி வெளியேறியது. தற்போது சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சியை நடத்தி வருகிறது.

4 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா
அரியானா சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) எம்எல்ஏக்கள் 10 பேரில் 4 பேர் (ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா, தேவேந்திர பாப்லி, அனுப் தனக்) கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்களில், அனுப் தனக் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா, தேவேந்திர பாப்லி ஆகியோர் நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்கள் வரும் நாட்களில் பாஜக அல்லது காங்கிரஸில் சேரவாய்ப்புள்ளது. எனவே இந்த தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததால் பெரும் கட்சியின் நிலைமை பலவீனமான நிலையில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Related posts

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்