பாஜவில் சேர சென்ற அதிமுக மாஜி எம்பியை நடுரோட்டில் மடக்கிய ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேனி மக்களவை அதிமுக மாஜி எம்பி பார்த்திபன், மதுரைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி முன்னிலையில் பாஜவில் இணையப்போவதாகவும், இதற்காக அவர் காரில் மதுரை சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனது பேச்சை நிறுத்திக் கொண்டு, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆர்.பி.உதயகுமார் உடனடியாக காரில் தேனிக்கு கிளம்பிச் சென்றார். தேனியில் இருந்து மதுரை நோக்கி வந்த பார்த்திபனை, ஆண்டிபட்டியில் நடுரோட்டில் சந்தித்து பேசினார். பின்னர் தனது காரில் உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டத்தில் பேச வைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பார்த்திபன் கூறுகையில், ‘‘கடமலைக்குண்டுவில் நடந்த கூட்டத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது, மாஜி அமைச்சர் உதயகுமார் என்னை சந்திக்க விரும்புவதாக கிடைத்த தகவலின் பேரில் வந்தேன். தேனியில் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை. நான் பாஜவில் இணைய உள்ளேன் என வெளியாகும் செய்தி யாரோ வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட தகவல். மாற்றுக்கட்சியில் இணையும் சிந்தனைக்கே இடமில்லை. அதிமுக எனது ரத்தத்தில் ஊறிய கட்சி’’ என்றார்.அதிமுக பிளவுபடாமல் இருந்த காலக்கட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் பார்த்திபன். தனக்கு மிகவும் விசுவாசமானவர் என்பதாலேயே, மாவட்டத்தில் அவ்வளவாக பிரபலமாகாத இவருக்கு எம்பி சீட்டை ஓபிஎஸ் வாங்கிக் கொடுத்தார். ஓபிஎஸ் தர்மயுத்தம் ஆரம்பித்தபோதும், தனி அணியாக இருந்தபோதும் அவருடனே சிறிது காலம் இருந்தார். பின்னர் திடீரென்று மனம் மாறி எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக மாறி, ஓபிஎஸ்சையே கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார். இந்த சூழலில்தான் தற்போது இவர் பாஜ கட்சிக்கு மாறப்போவதாக தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு