பாஜ குறித்து பேச அதிமுகவுக்கு எடப்பாடி திடீர் தடை

சென்னை: டெல்லி மிரட்டல் எதிரொலியாக, பாஜ குறித்து பேச அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் தடை விதித்துள்ளார். பாஜவின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகுஅதிமுக-பாஜ மோதல் அதிகரித்து வருகிறது. அதிமுகவில் எடப்பாடியைத் தவிர மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி, தென் பகுதியில் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் சில தலைவர்களுடன் அண்ணாமலை ரகசிய உறவைத் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 15ம் தேதி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தில் 14 சீட் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதோடு 14 தொகுதிகளையும் கேட்டு, அப்படியே எங்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்து விடுங்கள் என்று கூறினார். இதனால் பொறியில் சிக்கிய எலிபோல மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில்தான் அண்ணாவைப் பற்றி நடக்காத சம்பவத்தை சொல்லி தமிழக அரசியலை திசை திருப்பும் வேலையை அண்ணாமலை செய்தார். இதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்ததோடு, கூட்டணியில் பாஜ இல்லை என்றும் அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும் பாஜ அமைப்புச் செயலாளருமான கேசவ விநாயகம், அண்ணாமலையை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அவரை அவர் அமைதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜவின் டெல்லி மேலிடம் சார்பில் எடப்பாடிக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிலும் பலர் சிக்கியுள்ளனர். இதனால், கூட்டணி பற்றி முடிவை தௌிவாக எடுங்கள் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாஜ மற்றும் அண்ணாமலை குறித்து எந்தக் கருத்தையும் இனி யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி திடீர் தடை விதித்துள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகள் நேற்று காலை முதல் அண்ணாமலை குறித்தோ, பாஜ குறித்தோ பதில் கூறுவதை நிறுத்திக் கொண்டனர். இதனால் அதிமுக தலைமையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், தொண்டர்கள் குழம்பியுள்ளனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு