கைவினைக் கலைகள் ஆயிரமுண்டு ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் ஆயிரக் கணக்கில் செலவும் உண்டு. அதற்குதான் உதவுகிறது இந்த ‘பிட்கிளாஸ்‘( BitClass – Online Classes) செயலி. 1000க்கும் மேலான ஆன்லைன் வகுப்புகள், ஒர்க்ஷாப்கள் என பல சிறுசிறு வகுப்புகள், பயிற்சிகள் இங்கே பெறலாம். ரூ.50 முதல் ஒரு மணி நேரம் துவங்கி அதிக பட்சமாக ஒரு நாள் ஒர்க் ஷாப்கள் வரை இங்கே ஏராளமான வகுப்புகள் உள்ளன. வெறுமனே கைவினைக் கலைகள் மட்டுமின்றி யோகா, உடற் பயிற்சி டெமோ வகுப்புகள், நடனம், கையெழுத்துப் பயிற்சிகள், இசை வகுப்புகள் என பல பயிற்சிகள் பெறலாம். ஒருவேளை இந்த பிட் வகுப்பில் உங்களுக்கு திருப்தி கிடைத்தால் அந்தந்த நிபுணர்கள் நடத்தும் முறையான கோர்ஸ்களில் சேர்ந்து தனியாக அட்மிஷனும் பெறலாம். ஒருவேளை நீங்கள் ஒரு கைவினைக் கலைஞர், அல்லது ஏதேனும் திறமை கொண்டவர் அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க நினைத்தாலும் இங்கே வகுப்புகள் அறிவித்து உங்களுக்கான மாணவர்கள், வாடிக்கையாளர்களைப் பெறலாம்.