வீட்டில் நண்பருக்கு பிறந்தநாள் விழா என்று கூறி லாட்ஜில் தங்கி அதிகளவு போதை ஊசி பயன்படுத்திய கல்லூரி மாணவன் பலி: உடன் தங்கிய 3 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: வீட்டில் நண்பரின் பிறந்த நாள் விழா என்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி போதை ஊசி செலுத்திய கல்லூரி மாணவன் பலியானார். அவருடன் தங்கி இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை தட்டாங்குளம் சந்தியப்பன் தெருவை சேர்ந்தவர் ராகுல்(19). இவர் சூளையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி பெற்றேரிடம், ‘உடன் படிக்கும் நண்பன் பிறந்த நாள் விழாவுக்கு போகிறேன். இரவு வீட்டிற்கு வரமாட்டேன். நாளை தான் வருவேன்’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு, அண்ணாசாலை உட்ஸ் சாலையில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில், நண்பர்கள் விஷ்வா, குணால், வெள்ள, சஞ்சய், ஆகாஷ் ஆகியோருடன் நள்ளிரவு 12 மணிக்கு அறை எடுத்து 304ம் எண் அறையில் தங்கினார். மறுநாள் காலை 8 மணிக்கு ராகுல் அறையில் இருந்து வெளியே வரும் போது திடீரென மயங்கி விழுந்தார். மேலாளர் செல்வம், அவரை எழுப்ப முயன்றும் முடியவில்லை. இதனால் அவர், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ராகுலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அதிகளவில் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

பின்னர் ராகுலின் சகோதரர் கோகுலகிருஷ்ணன் அளித்த புகாரின்படி அண்ணாசாலை போலீசார், ராகுலுடன் அறையில் தங்கியிருந்த சூளை தங்கபிள்ளை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஆகாஷ், பட்டாளம் கனகராஜன் தோட்டத்தை சேர்ந்த செல்போன் விற்பனையாளர் சஞ்சய், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாட்ஜ் ரூம் பாய் மணிகண்டன்(21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ராகுல் நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி பயன்படுத்துவதற்காகவே லாட்ஜில் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.

போதை பவுடரை தண்ணீரில் கலந்து அதை ஊசியில் ஏற்றி, உடலில் செலுத்தியது தெரியவந்தது. அதில் ராகுல் அதிகளவில் போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டதால், போதை தலைக்கேறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து போலீசார் போதை ஊசி மற்றும் போதை பவுடர் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து ஆகாஷ், சஞ்சய், மணிகண்டன் ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் போதை ஊசி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு