பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு.. 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு..!!

சென்னை: பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே ஒரே ஆவணமாகியிருக்கிறது பிறப்பு சான்றிதழ். காரணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலை போன்றவற்றிற்கெல்லாம் பிறப்பு சான்றிதழ்கள் கட்டாயம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் கூறியதாவது; குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை வாயிலாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்களில், குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெயர் சேர்க்க வேண்டும். மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு தகவல் அளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தாண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு