மசோதாக்கள் குறித்து சர்ச்சை பேச்சு தமிழக ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாகரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாக கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) தயாராகும் மாணவர்களிடையே ஆளுநர் ரவி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது: இலவசங்கள் வழங்குவதால் நன்மை ஏதும் நடப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் சலுகை வழங்குவதால் நன்மை ஏதும் ஏற்படுவதில்லை. இலவசங்களை பெறும் மக்கள் அதனால் எந்த பயனும் அடைவதில்லை, சலுகைகள், இலவசங்கள் வழங்குவது என்பது நல்லதல்ல, அது ஆபத்தான செயல்முறை. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்து வருகிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் ஒரு அசாதாரண சட்டம் அதை அசாதாரண சூழல்களில் பயன்படுத்தினால் மட்டுமே சிறந்தது.

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு தற்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏதுமில்லை. வலிமையாக இல்லையென்றால் அமைதியாக வாழ முடியாது, பலவீனமானவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது. அரசியலமைப்பின்படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமையாகும்.

மாநில அரசும், ஆளுநரும் அரசியலமைப்பு படியே செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம், மாநில, ஒன்றிய அரசுகளுக்கு அதிகாரங்களை பிரித்து கொடுத்துள்ளது. அவை மாநில பட்டியல், பொது பட்டியல் மற்றும் ஒன்றிய பட்டியல் என பிரிக்கப்பட்டுள்ளது பொது பட்டியலில் உள்ளவைக்கு ஒன்றிய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் சட்டம், ஒன்றிய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் முதலிடத்தை வகிக்கிறார்.

இரண்டாவதாக சட்டப்பேரவை வருகிறது. ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டம் ஆகாது. ஆளுநரும், சட்டசபையும் சட்டமன்றத்தின் அங்கங்கள். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று நடவடிக்கைகளே எடுக்க முடியும். ஒன்று அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி குடியரசு தலைவருக்கு அனுப்பினால் அதில் ஆளுநருக்கு மாற்றுக்கருத்து உள்ளதாக தான் அர்த்தம். ஆளுநர் சட்ட மசோதா நிலுவையில் வைத்தால் மசோதா காலாவதியானதாகவே பொருள். நிலுவையில் வைப்பது என்பது நிராகரிக்கப்பட்டத்தை கண்ணியமாக குறிப்பிடுவதாகவே அர்த்தம்.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதி வந்துள்ளது. நாட்டில் பல பயங்கரவாத செயல்களுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்றவர்களில் 90 சதவிதம் பேர் இந்த அமைப்பே அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

கூடங்குளம் அனு மின் நிலையம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். அதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் அவர் கருத்து தெரிவித்துள்ளது தமிழக அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை: பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்துள்ளார்.

அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும்.

முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், ‘இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை’ என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது. சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது.

ஆனால், 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியன்று ஆளுநர் அவர்களாலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவர் பண மசோதா என்று 2022ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதியன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் மார்ச் 6ம் தேதியன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல.

‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.

1975ம் ஆண்டில் பஞ்சாப் அரசுக்கு எதிராக சம்சர்சிங் தொடர்ந்த வழக்கில், ‘‘ஆளுநர் என்பது மாநில அரசின் சுருக்கம் எனவும், குடியரசுத் தலைவர் என்பது ஒன்றிய அரசின் சுருக்கெழுத்து என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம்.

சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநர் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிருவாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது. எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.

அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

இதனை உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆ ளுநர் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை