பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அந்த தண்டனை காலம் முடிவடைவதற்குள் அவர்களை கடந்த 2022, ஆகஸ்ட் 15ம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது. அவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் “இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடந்ததால் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும். குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநில அரசின் மீதான விமர்சனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதில், தங்களுக்கு எதிரான பாதகமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது