பைக் டாக்சி சேவைக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை உத்தரவுக்கு விதித்த தடையை எதிர்த்து அரசு முறையீடு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது குற்றம் எனக் கூறி ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில் இருந்து நீக்க சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை பரிந்துரையில் தவறில்லை என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேபிடோ சார்பில் 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பைக் டாக்சி தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைநகர் டெல்லியில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறி அந்த உத்தரவு நகல் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்