பைக்கில் சென்றபோது விபத்து 40 அடி பாலத்திலிருந்து விழுந்து கல்லூரி மாணவன் பரிதாப பலி

புழல்: சென்னை மணலி அடுத்த சின்னசேக்காடு, சாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார் (22). இவர்கள் 2 பேரும் சென்னை எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரியில் 4ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகின்றனர். நண்பர்களான 2 பேரும், நேற்று மாலை கல்லூரி முடித்துவிட்டு, ஒரே பைக்கில் வீட்டிற்கு சென்றனர். அப்போது, நிதீஷ்குமார் பைக்கினை ஓட்ட பின்னால் விக்னேஷ் அமர்ந்து இருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலை, புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தின் மேலே சென்றபோது, திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில், பின்னால் அமர்ந்து வந்த விக்னேஷ் 40 அடி உயரத்திலிருந்து கீழே சர்வீஸ் சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால், அமர்ந்து வந்த நிதிஷ்குமார் மேம்பாலம் மேலே உள்ள சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்குச் சென்ற மாதவரம் போக்குவரத்து புலனாய்வுச் பிரிவு போலீசார், விக்னேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காகவும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு