பீகாரில் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு; பாஜக கூட்டணியில் இருந்து இனிமேல் ஓடமாட்டேன்: மோடியை சந்தித்த நிதிஷ் குமார் பேட்டி

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், கடந்த சில வாரங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தார். அதன்பிறகு, பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். வரும் 12ம் தேதி நிதிஷ் குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியை நேற்று நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 1995ம் ஆண்டு முதல் பாஜகவுடனான கூட்டணி தொடர்பை நினைவு கொள்கிறேன். இரண்டு முறை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளேன்.

ஆனால் இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன். இனிமேல் இந்த கூட்டணியில் இருப்பேன். மக்களவை தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்கள் தெரிவிப்பார்கள்’ என்றார். இன்றைய நிலையில் பீகாரில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான சீட் ஒதுக்கீடு குறித்தும் பாஜக தலைவர்களிடம் நிதிஷ் குமார் பேசியுள்ளார். மேலும் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த தேர்தலுடன் சேர்த்து பீகார் சட்டப் பேரவை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் பேரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் பாஜகவின் பலம் அதிகமாக இருப்பதால், நிதிஷ் குமாரின் இந்த யோசனையை பாஜக தலைமை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்