பீகாரின் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளி கைது: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளிராகேஷ் ரஞ்சனை சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் கைது செய்தனர். நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக பீகாரின் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்கிற ராகேஷ் ரஞ்சனை பீகார் மாநிலம் பாட்னாவின் புறநகரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். இவர் நாலந்தாவை சேர்ந்தவர். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். கைதான ராகேஷை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கி உள்ளது. முன்னதாக கடந்த வாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் படி ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘‘இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’’ என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்