பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பாட்னா : பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் தொடர் பால விபத்துகள் அரங்கேறும் மாநிலமாக மாறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் சுபால் மாவட்டம் மரிச்சா பகுதி அருகே கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.984 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.கடந்த ஜூன் 18ம் தேதி அராரியா மாவட்டம் பராரியா கிராமத்தில் பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த புதிய பாலம் திறப்பு விழாவுக்கு சில தினங்களுக்கு முன் சரிந்து விழுந்தது. சிவான் மாவட்டத்தில் ராம்கர் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 30 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. அதற்கு அடுத்தநாளே(ஜூன 23) கிழக்கு பூர்வி சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியில் கால்வாய் மீது ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட சிறிய பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.

ஜூன் 27ம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பாலமும், 29ம் தேதி மதுபானி மாவட்டம் மாதேபூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீள பாலமும், கடைசியாக கடந்த 30ம் தேதி பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் தாக்கூர்கஞ்ச் பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது. இதனிடையே சிவான் மாவட்டம் தியோரியா தொகுதியில் பல கிராமங்களை இணைக்கும் விதமாக கண்டகி ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒருபகுதி நேற்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதுவரை பீகாரில் கடந்த 15 நாட்களில் நடந்த 9வது பால விபத்து இதுவாகும்.

இந்த நிலையில், பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,” சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள் மட்டுமல்லாது, அண்மையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 வாரத்தில் 9 பாலங்கள் இடிந்துள்ளன. எனவே பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை சோதனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்க பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். சோதனையில் கண்டுபிடிக்கப்படும் பலவீனமான பாலங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும். பொதுவாகவே பீகார் மாநிலம் வெள்ள பாதிப்பு மிகுந்த மாநிலம் என்பதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது