பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்: நிதிஷ்குமாரின் ராஜினமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு

பாட்னா: பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இன்று தனது பதவி ராஜினம செய்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிதிஷ், மீண்டும் பாஜவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி நடந்தது. கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனாலும், ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜ தனது கட்சியையே உடைக்க திட்டம் தீட்டுகிறது என குற்றம்சாட்டிய நிதிஷ்குமார் கடந்த 2022ம் ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். அதுமட்டுமின்றி, வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள வலுவான இந்தியா கூட்டணி அமைய நிதிஷ் அடித்தளமாக செயல்பட்டார். இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி நிதிஷுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்த நிதிஷ் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த அவர், ஆர்ஜேடி உடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் இணைய முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று காலையில் தனது ராஜினாம கடிதத்தை வழங்கினார். நிதிஷ் குமார் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பீகார் ஆளுநர் மாளிகை அறிவித்தது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?