பீகாரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்; 73% அடித்தட்டு பிரிவினரை பாஜ அரசு புறக்கணிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு

பாட்னா: ‘மக்கள்தொகையில் 73 சதவீதம் உள்ள சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்றிய பாஜ அரசு புறக்கணிக்கிறது’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘ஜன் விஸ்வாஸ்’ (மக்கள் விசுவாசம்) பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நாட்டு மக்களிடையே வெறுப்பை பரப்பி பிளவை ஏற்படுத்த பாஜ முயற்சிக்கிறது.

நாங்கள் வெறுப்பு சந்தையில் அன்பின் கடைகளை திறக்கிறோம். நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. சமூகத்தின் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த 73 சதவீத மக்களை ஒன்றிய பாஜ அரசு புறக்கணிக்கிறது. அக்னிபாதை ராணுவ ஆட்சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது’’ என்றார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், ‘‘வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். நாட்டின் செழிப்புக்காகவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் மோடி அரசு கட்டாயம் வெளியேற்றப்பட வேண்டும்’’ என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘பாஜ பொய்களின் தொழிற்சாலை. அக்கட்சி தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை தருகிறார்கள். ஆனால் நாங்கள் பீகார் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் வேலைகளுக்காக போராடுகிறோம்’’ என்றார்.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு