அத்வானிக்கு பாரத ரத்னா விருது: வீட்டுக்கே சென்று ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அவருடைய வீட்டுக்கே சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.இந்திய குடிமக்ககளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்,மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண்சிங்,பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்குர்,பாஜவின் மூத்த தலைவர் அத்வானி(96) ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில்,நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பிரபாகர் ராவ், சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சவுத்ரி,கற்பூரி தாக்குர் சார்பில் அவரது மகன் ராம்நாத் தாக்குர் ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்து விருதுகளை பெற்றனர். வயது மூப்பு காரணமாக அத்வானியால் ஜனாதிபதி மாளிகைக்கு வரமுடியவில்லை.

இந்நிலையில்,நேற்று அத்வானியின் வீட்டுக்கே ஜனாதிபதி முர்மு சென்றார். அப்போது அத்வானியிடம் முர்மு விருதை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கு மோடி அவமரியாதை காங்கிரஸ் குற்றச்சாட்டு
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் வயது மூப்பு காரணமாக இருக்கையில் அமர்ந்திருந்த அத்வானிக்கு ஜனாதிபதி முர்மு நின்று கொண்டு விருதை வழங்கினார். அப்போது, அருகில் இருந்த பிரதமர் மோடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், ஜனாதிபதி முர்மு நின்று கொண்டே அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். ஆனால், மோடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இது ஜனாதிபதிக்கு மோடி செய்த மிக பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்த பிரச்னையை எழுப்பிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், அரசியல் சட்டத்தின் மீது பாஜவுக்கு நம்பிக்கை இல்லை என குற்றம் சாட்டினார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்