பக்த விஜயம்

விஜயம்! இதற்குமேல் வெற்றி கொள்ள எதுவும் இல்லை என்பதே அந்தச் சொல்லுக்குப் பொருள். உத்தமமான பக்தர்கள் அப்படிப்பட்டவர்கள்.தங்களை வென்றதன் மூலம், உலகம் முழுதும் வென்றவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பக்தர்களின் வரலாறுகளை விவரிக்கும் நூலே “பக்த விஜயம்’’. விஜயம் என்ற சொல்லுக்கு வருகை என்றும் பொருள் உண்டு. உத்தமமான ஆன்மாக்கள், அல்லல்படும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக வருகை புரிவதே, பக்த விஜயம். அந்த உத்தமமான ஆன்மாக்களின் வருகைகளை, வரலாறுகளை விவரிக்கும் நூலே ‘பக்த விஜயம்’.

பக்த விஜயம் எனும் அந்நூல் உருவான வரலாறு கலியுகம் 4811-ம் ஆண்டு! இப்போதைக்கு ஏறத்தாழ 314-ஆண்டுகளுக்கு முன், பக்த துகாராமின் (பெண் வயிற்றுப் பிள்ளை) பேரனான வாசுதேவபாவா என்பவர் பண்டரிபுரத்தில், பிரம்ம அம்சமான நாபாஜி சித்தர் எழுதிய இந்துஸ்தான் மொழியில் (இதற்கென்று தனி எழுத்துக்கள் கிடையாது. உருது மொழி – இந்தி மொழி எழுத்துக்களே பயன்படுத்தப் படுகின்றன) இருந்த பக்தசாரம் என்ற நூலைப் பாராயணம் செய்து, மக்களிடையே சொற்பொழிவும் செய்து வந்தார். அப்போது அந்த நாட்டை ஆண்டுவந்த பாதுஷா, நாள்தோறும் வந்து, அந்நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்து அனுபவித்து வந்தார்.

ஒருநாள்… வாசுதேவபாவா, துகாராம் சுவாமிகள் முக்தி அடைந்ததைச் சொல்லும்போது, ‘‘அந்த மகான் உடலோடு வானுலகை அடைந்தார்’’ என்று சொல்லி விவரித்தார். அதைக் கேட்ட பாதுஷா சந்தேகப்பட்டார்; ‘‘துகாராம் அவ்வாறு உடலுடன் போனதை நான் ஏற்கவில்லை. அவர் உடலோடு வானுலகம் சென்றதைப் பார்த்தவர்கள், யாராவது இவ்வூரில் இருக்கிறார்களா?’’ எனக் கேட்டார். ‘‘நாங்கள் சிறு வயதாக இருந்தபோது போனார். இதுஉண்மை’’ என்று ஒரு சிலர் பதில் அளித்தார்கள். அதை ஒப்புக்கொள்ளவில்லை பாதுஷா; ‘‘இது சுத்த அபத்தம்’’ என்றார். அதைக் கேட்ட வாசுதேவபாவாவால் தாங்க முடியவில்லை; அவரும் சந்தேகப்பட்டார்; ‘‘என் தாயார் மிகவும் வயதானவர்கள். தன் தந்தையைப்பற்றி (துகாராமை) அவர்களுக்கு நன்றாகவே தெரியும்’’ என்றார்.

பாதுஷா தொடர்ந்தார்; ‘‘உன் தாயை அழைத்துக் கொண்டு வந்து நிரூபித்தாலும் சரி! நான் நம்பமாட்டேன். இனிமேல் இந்தப் புராணத்தைக் கேட்கவும் மாட்டேன்’’ என்றார்.சபையில் இருந்த மற்றவர்களும், அப்படியே சொன்னார்கள். வாசுதேவபாவா சபையை நோக்கி, ‘‘சபையோர்களே! அடியேன் வரும்வரை, யாரும் இந்தச் சபையை விட்டுப் போகாதீர்கள்! என் தாயைப் பார்த்து உண்மை என்ன என்பதை இன்னும் பத்தேநிமிடங்களில் தெரிந்து கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டை நோக்கிப் போனார்.

அப்போது, ஒரு சாது வேடத்தில் வந்து அமர்ந்து கதைகேட்டுக் கொண்டிருந்த துகாராம், ‘‘வாசுதேவா! வாசுதேவா!’’ என்று கூப்பிட்டுக்கொண்டே, பேரனின் பின்னால் போனார். கூப்பிட்டுக் கொண்டே போனவர், தன் உண்மை வடிவத்துடன் பேரன் முன்னால் நின்று, ‘‘நான்தான் உன் தாத்தா துகாராம்’’ என்றார்.வாசுதேவபாவாவும் உடனே அவர் கையைப் பிடித்து, ‘‘அப்படியானால் என்னுடன் வாருங்கள்! என் தாயிடம் போய் உண்மை அறியலாம்’’ என்று சொல்லி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

வீட்டிற்குள் நுழையும்போதே, துகாராம் தன் மகளின் பெயரைச் சொல்லி அழைத்தார். தந்தையின் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்தாள்; தந்தையைப் பார்த்ததும் அவர் கால்களில் விழுந்து வணங்கி, ‘‘ஆ! அப்பா! அப்பா! ஆச்சரியமாய் இருக்கிறது நீங்கள் வந்தது. எண்பது வருடங்களாக நீங்கள் எங்கு மறைந்திருந்தீர்கள்?’’ என்று பலவாறாகவும்போற்றித் துதித்தாள்.

துகாராம், தான் வந்த காரணத்தைச் சொல்லி, பேரன் பக்கம் திரும்பி, ‘‘அப்பா! என் கண்மணியே! அதோ பார்! நான் மீட்டிக் கொண்டிருந்த தம்புரா இருக்கிறது.இந்தத் தம்புராவை எடுத்துக் கொண்டு சபைக்குப் போ! ‘துகாராம் உடலோடு மேலுலகம் போனது உண்மையானால், அவர் தன் கையால் மீட்டிக்கொண்டிருந்த இந்தத் தம்புராவும் ஆகாயத்தில் செல்லும்’ என்று சொல்லி, தம்புராவை ஆகாயத்தில் வீசி எறி! உடனே நான் அதைப் பிடித்துக்கொண்டு வானுலகம் செல்கிறேன்’’ என்றார்.

வாசுதேவபாவா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்; துகாராம் சுட்டிக்காட்டிய தம்புராவை எடுத்துக்கொண்டு வேகவேகமாகச் சபையை நோக்கி நடந்தார். அங்கு போனதும், பாதுஷாவை நோக்கி, ‘‘பாதுஷாவே! உங்கள் சந்தேகத்தை இந்தத் தம்புராவால் நீக்குகிறேன் பாருங்கள்!’’ என்றார். அதன்பின் பகவானைப் பல விதங்களிலும் துதித்த வாசுதேவபாவா, ‘‘பகவானே! உங்களுக்கு மிகவும் நெருங்கிய பக்தரான துகாராம் உடம்போடு வானுலகம் சென்றது சத்தியமானால், அவருடைய இந்தத் தம்புராவும் வானுலகம் செல்லும்’’ என்று சொல்லி, கையிலிருந்த தம்புராவை ஆகாயத்தில் வீசி எறிந்தார். ஆகாயத்தில் இருந்தவாறே, அந்தத் தம்புராவைப் பிடித்த துகாராம், ‘‘ஜெய் ஜெய் விட்டல! பாண்டுரங்க விட்டல! பண்டரி விட்டல!’’ என்று நாமபஜனை செய்தவாறே தம்புராவை மீட்டினார்.

அனைவரும் பார்த்து வியந்தார்கள்; அவர்களும் நாமபஜனை செய்யத் தொடங்கினார்கள். துகாராம் நாம சங்கீர்த்தனத்தை நிறுத்தி, ‘‘பக்தர்களே! இங்கே நடைபெறும் ‘பக்த சரிதத்தை – பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை அன்போடு கேட்பவர்களும், ஓதுபவர்களும், பிறவிப் பெருங்கடலையும் துயரப் பெருங்கடலையும் கடப்பார்கள். சகல செல்வங்களையும் அடைந்து முடிவில் முக்தியையும் பெறுவார்கள்’’ என்று சொல்லி மறைந்தார். அனைவரும் பார்க்க சத்தியத்தை மெய்ப்பித்த, துகாராமால் போற்றிப் பாராட்டப்பட்ட ‘பக்த சரிதம்’ எனும் அந்நூலை எழுதியவர், நாபாஜிசித்தர்.

கலியுகம் 4732-ல் ஹிந்துஸ்தானி மொழியில் எழுதப்பட்டது. எழுநூறு அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளைக்கொண்டது. தான் எழுதிய உத்தமமான அந்நூலை, நாபாஜி சித்தர், தம் சீடர்களான உத்தவ சித்தர் முதலானவர்களுக்கு உபதேசம் செய்தார்.உபதேசம் செய்த அந்த வரலாறுநாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, உடலோடு விண்ணுலகம் அடைந்த துகாராம், அப்போது ஆகாயத்தில் நின்றபடி அனைவரையும் அழைத்து, ‘‘பகவான் எழுந்தருளியிருக்கும் பரமபதம் அடையலாம். வாருங்கள்!’’ என்றார்.

பெரும்பாலானவர்கள் அதை ஏற்கவில்லை. 22-பேர் மட்டும், துகாராமின் வார்த்தைகளை ஏற்றார்கள். ‘‘பிராப்தி – கொடுப்பினை இல்லாத மக்கள் என்ன செய்ய?’’ என்று வருந்தினார் துகாராம்.
ஒப்புக்கொண்ட இருபத்திரண்டு பேர்களுடன் பரமபதத்திற்குப் புறப்பட்டார் துகாராம். அவர் அவ்வாறு ஆகாயவீதி வழியாகச் செல்வதைத் திண்டிவனத்தில் இருந்த உத்தவசித்தர் முதலானோர் கண்டார்கள்.

உடனே நாபாஜி சித்தரிடம் போய்த் தாங்கள் பார்த்ததை எல்லாம் சொல்லி, ‘‘என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்!’’ என்று வியந்தார்கள். நாபாஜி சித்தர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, விட்டல நாமம் சொல்லி ஆடத் தொடங்கினார். ‘‘சுவாமி! சுவாமி! என்ன ஆயிற்று? ஏன் இந்த ஆனந்தக் கூத்து?’’ என்று கேட்டார்கள் உத்தவசித்தர் முதலானோர். அந்த வார்த்தைகளைக் கேட்ட நாபாஜி சித்தர், ஒரு விநாடிமெய் மறந்தார். பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அவர், ‘‘நல்லதைக் கேட்கும் குணசீலர்களே! உடலோடு ஆகாயத்தில் போனாரே! அவர் பெருமையை ஆதிசேஷனாலும் சொல்லி முடியாது.

‘‘அவர் பிரம்ம ஞானம் பூரணமாய்த் தெரிந்தவர். பண்டரிநாதன் பணி செய்யும் படியான தவவலிமை உள்ளவர். துகாராம் என்ற பெயர் உடையவர். வைராக்கியத்தில் வல்லவர்.மிகவும் நல்லவர். ஜீவ காருண்யத்தையே விரதமாகக் கொண்டவர். பிரம்மஞானமே முக்கியம் எனத் தெளிவுபடுத்தியவர். மனதைப் பிரம்மானந்தத்தில் நிலை நிறுத்தியவர்.எந்த நேரமும் வாக்கை, இஷ்ட தெய்வத்தைத் துதிக்க வைத்தவர்.‘‘தான் பிறந்தது சாதுக்களின் சேவைக்கே என்று இருந்தவர். ஜீவன்களுக்கே இயல்பான, நான் எனும் தன்மை இல்லாதவர். அபிமானத்தை வென்றவர், அந்த ஆகாயத்தில் சென்றவர்’’ என்றெல்லாம் சொல்லி துகாராமைப் பற்றி விவரித்தார்.

‘‘துகாராம் அவ்வளவு உயர்ந்த நிலையை எப்படி அடைந்தார்? முற்பிறப்பில் செய்ததா? இப்பிறப்பில் செய்ததா? எங்களுக்குச் சொல்லுங்கள்!’’ என வேண்டினார் உத்தவசித்தர். நாபாஜி சித்தர் விவரிக்கத் தொடங்கினார்; ‘‘முதலில் இவர் (துகாராம்) உத்தவர் என்ற பெயரில், கண்ணனிடம் உபதேசம் பெற்று உத்தமராக இருந்தார். ‘‘அடுத்த பிறவியில் அவர், ஒரு குழந்தையாகிப் பண்டரிபுரத்திற்கு அருகில் உள்ள ‘சந்திரபாகா’ நதியில் மிதந்தபடி வந்தார். அவரைக் கண்டு எடுத்த பாண்டுரங்க பக்தராகிய தாம்ஸேட்டி என்பவர், அக்குழந்தைக்கு ‘நாம்தேவ்’ எனப் பெயரிட்டு வளர்த்தார். ‘‘நாமதேவர் என்கிற பெயரில் அவர் பல அதிசயங்களைச் செய்து காட்டினார்; பகவான் பாண்டுரங்கனுக்கு நேருக்கு நேராக அன்னம் ஊட்டினார்; சொர்க்கத்தில் இருந்து அபூர்வமான கொடிகளை வரவழைத்து, அவற்றை நாதேஸ்வரர் கோயிலில் நாட்டினார்.

நூறு கோடிக் கீர்த்தனைகளால் ராமாயணம் பாட எண்ணிக் கீர்த்தனைகள் பாடத் தொடங்கினார்; பாதி பாடி முடிப்பதற்குள் அந்த நாமதேவருக்கு முதுமை மேலிட்டு, அவர் மேலுலகை அடைந்தார். ‘‘மீதியிருந்த பாதி கீர்த்தனைகளைப் பாடி முடிப்பதற்காக, அந்த நாமதேவரே, துகாராமாகப் பிறந்து கீர்த்தனைகளைப் பாடி ராமாயணத்தை நிறைவு செய்தார். வந்த வேலை முடிந்து, அவர்தான் அந்தத் துகாராம். தான் இப்போது உடலோடு வைகுண்டம் போகிறார்’’ என்று சொல்லி முடித்தார் நாபாஜி சித்தர். அவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த உத்தவ சித்தர் பேசத் தொடங்கினார்.

‘‘சுவாமி! தாங்கள் சொல்லும் அந்த உத்தவர், பகவான் கண்ணனிடம் பிரம்மோபதேசம் பெற்று தெய்விக நிலை அடைந்த உத்தவர், இவ்வுலகில் குழந்தையாக வரவேண்டிய காரணம் என்ன சொல்லுங்கள் சுவாமி!’’ என்று வேண்டினார் உத்தவ சித்தர். நாபாஜி சித்தர் பதில் சொல்லத் தொடங்கினார்; ‘‘உத்தவர் மட்டுமல்ல! வால்மீகர், வியாசர், சுகர், அக்ரூரர், அருணன், தாரகன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஆதிசக்தி முதலானவர்களும் இந்த உலகில் அவதாரம் செய்தார்கள். ‘‘அவரவர்களுக்கு உண்டான குலாசார தர்மங்களையும், தெய்வ வழிபாட்டையும், பிரம்ம ஞானத்தையும் இவ்வுலக மக்களுக்குப் போதிக்க வந்தார்கள்’’ என்றார் நாபாஜி சித்தர்.

அடுத்த கேள்வியைக் கேட்டார் உத்தவசித்தர்; ‘‘உலகில் என்ன விபரீதம் நடந்தது? எதற்காக அவர்கள் எல்லாம் அவதாரம் செய்தார்கள்?’’ எனக் கேட்டார். நாபாஜி சித்தரின் மனம் கசிந்தது; ‘‘பரீட்சித்து மன்னரால் தண்டிக்கப்பட்ட கலிபுருஷன், ‘இந்த உலகில் கலி பிறந்து ஐயாயிரம் ஆண்டுகள், நான் என் சொரூபத்தைக்காட்ட மாட்டேன்’ என்று வாக்கு கொடுத்திருந்தான். ‘‘இருந்தும் கலிகால மகத்துவத்தால், ஒன்றுமையாக இருந்த மக்களிடம் மன வேறுபாடு உண்டாகி ஒற்றுமை சீர் குலைந்தது. ‘‘தீர்த்த யாத்திரை = புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், கோயில்களுக்குச் செல்வது, தெய்வங்களை வழிபடுவது, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது, பெற்றோர்களைப் பூசிப்பது, அடியார் சரித்திரங்களைப் படிப்பது, முக்தியடைய விரும்புவது முதலான நற்செயல்கள் அனைத்தையும் விட்டார்கள்.

‘‘அதே சமயம் தீய பழக்கங்கள் அனைத்தையும் மிகுந்த உற்சாகத்தோடு செய்தார்கள். எங்கு பார்த்தாலும் தீமைகள் பெருகி தீயவர்கள் அதிகமானார்கள். நல்லவர்கள் குறைந்து போய், மிகுந்த பயத்துடன்இருந்தார்கள்.(மறைந்த, மறந்த நல்லவைகளும்;பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் தீயவைகளும், மூலநூலில் இந்த இடத்தில் மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன; இன்று நாம் காணும் அவ்வளவு தீய வைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன)‘‘இந்தத் துயரங்களை எல்லாம் தீர்ப்பதற்காக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, முன்சொன்ன அத்தனைத் தெய்வங்களும் மறுபடியும் பூமியில் அவதாரம் செய்யத் தீர்மானித்தார்கள்.

‘‘வேத வியாசர் – ஜெயதேவராக, வால்மீகி – துளசிதாசராக, உத்தவர் – நாமதேவராக, சுகர் – கபீர்தாசராக, அக்ரூரர் – சூர்தாசராக, அனுமார் – ராமதாசராக எனப் பலரும், பற்பல இடங்களில் அவதரித்தார்கள்’’ என்றார் நாபாஜி சித்தர். அவர் சொன்னதையெல்லாம்கேட்டு பக்தியில் திளைத்திருந்த உத்தவசித்தர், ‘‘சுவாமி! அவர்களின் அந்த வரலாறுகளையெல்லாம் விரிவாகச் சொல்லுங்கள்!’’ என வேண்டினார். நாபாஜி சித்தரும் சொன்னார்.

அதைக் கேட்ட உத்தவசித்தர், அந்த எழுநூறு சரித்திரங்களையும் சுருக்கமாகக் `குவாலியர்’ மொழியில் எழுதி ‘பக்த மாலா’ எனப் பெயரிட்டார். அதன்பின் மைபதி பாவாஜி என்பவர், கலியுகம் 4862-ம் ஆண்டு, அந்த நூலில் உள்ள ஞான வாக்கியப் பேச்சுக்களை முழுவதும் சேர்க்காமல் சிலவற்றை மட்டும் வைத்து, 109-சரித்திரங்களை மஹாராஷ்டிர மொழியில் எழுதி ‘பக்தி விஜயம்’ எனப் பெயரிட்டார். மற்ற சரிதங்களுக்கு சந்த விஜயம், சந்த விஜய லீலாமிர்தம் எனப் பெயரிட்டார். அதன் பின், தீபதேவ் என்பவர் அந்நூலில் உள்ள ஞான வாக்கியங்களை மட்டும் தொகுத்து, மஹாாஷ்டிர மொழியில் எழுதி `தீப ரத்னாகரம்’ எனப் பெயரிட்டார்.

இதுவரை பார்த்த நூல்களை எல்லாம் ஓரளவிற்குப் பார்த்தும், தகுந்தவர்களிடம் பொறுப்பாகக் கேட்டும், அந்தச் சரித்திரங்களை எல்லாம் அப்படியே வரிசையாகத் தொகுத்து 1864-ம் ஆண்டு, சிற்றூர் வேங்கடதாசர் என்பவர், தமிழில் எழுதி, ‘பக்த விஜயம்’ எனப் பெயரிட்டார். தமிழில் வெளிவந்த முதல் `பக்த விஜய’ நூல் இதுவே. பக்த விஜயக் கதைகள் வெளிப்பட்ட வரலாறு இதுவே! பாண்டுரங்க பக்தர்களின் வரலாறுகளையும், அவர்கள் பக்தியையும், அதற்கும் மேலாகப் பாண்டுரங்கனையும் நேருக்கு நேராகக் கண் முன்னால் நிறுத்தும் நூல் இது.

பி.என்.பரசுராமன்

 

Related posts

குறைகளற்ற நிறைவான வாழ்வருளும் தேவி

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்

கருவூர்த் தேவர்