Wednesday, July 3, 2024
Home » பகவானே போதித்த பிராணாயாமம்!

பகவானே போதித்த பிராணாயாமம்!

by Kalaivani Saravanan

நம் காயத்துக்குள் அதாவது உடலுக்குள் நுரையீரல் என்ற காற்றடைத்த பை, ஆக்ஸிஜனைத் தேக்கி வைத்துக் கொள்கிறது என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அது எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற பிராண கணக்கைச் சொல்லிக் கொடுத்தது கொரோனாதான். வெகு அலட்சியமாகப் புறக்கணிக்கப்பட்ட பிராணாயாமப் பயிற்சி கொரோனாவால் புத்துணர்வு பெற்றது என்பதும் உண்மை. ஆக்ஸிஜன் குறைந்த நுரையீரலுக்குள் கொரோனா கிருமிகள் சுதந்திரமாகப் புகுந்து கொள்வதால், ஆக்ஸிஜனைத் தேடி நுரையீரலுக்கு வரும் சிவப்பு அணுக்கள் ஏமாற்றமடைகின்றன.

அவ்வாறு அங்கிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு மூளை, கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல், இதயம் போன்ற பகுதிகளுக்கு சப்ளை செய்ய வேண்டிய தன் பணியை நிறைவேற்ற முடியாததால் அவை சோர்ந்து போய், மரணித்தும் விடுகின்றன. இதுவே கொரோனாவின் வெற்றி. இந்த உண்மையை உணர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நுரையீரலில் ஆக்ஸிஜனை இருத்தி வைக்கும் பல பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். குப்புறப் படுத்துக்கொண்டு சுவாசித்தால் அதன் அளவு அதிகரிக்கும் என்று ஒரு யோசனை. லிங்க முத்ரா பிடித்தால் கூடுதல் ஆக்ஸிஜன் பெற்று நுரையீரலை பலப்படுத்தலாம் என்று இன்னொரு யோசனை.

‘Keep fingers crossed’ என்று ஆங்கில சொலவடை ஒன்று உண்டு. அதாவது ஏதேனும் குழப்பம், முடிவெடுக்க முடியாத பதற்றம், என்னாகுமோ, ஏதாகுமோ என்ற கற்பனை பயத்தால் ஏற்படும் படபடப்பு, மூச்சிரைப்பு என்றெல்லாம் வருமானால் உடனே மார்புக் கூட்டில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறையும். இச்சமயத்தில் ‘இரண்டு கை விரல்களையும் பின்னிக்கொண்டு சிலநிமிடங்கள் அமைதியாக இரு‘ என்று அந்த சொலவடை விளக்குகிறது.

அப்படி விரல்கள் பின்னி இருக்கும்போது அதிகமான ஆக்ஸிஜனை நெஞ்சுக்கூடு பெறுகிறது, (லிங்க முத்ராவின் பலனும் இதுதான்) இதனால் சுவாசம் சீராகிறது, மனம் அமைதியடைகிறது, குழப்பம் விலகி தெளிவு பிறக்கிறது, பிரச்னைக்குத் தீர்வு காணமுடிகிறது. ஆங்கிலச் சொலவடையும் நம் பண்டைய இந்த லிங்க முத்ராவிலிருந்து உருவானதாக இருக்கலாம்.

இதையே நம் முன்னோர்கள், ‘ஏ, மனமே, சும்மா இரு,’ என்று சொல்லி வைத்தார்கள். அதாவது மனசு சும்மா இருந்தால் குழப்பத்துக்கு சான்ஸே இல்லை என்பது அவர்களுடைய அனுபவம். அதைத்தான் இப்போது நாம் ‘தியானம்’ என்று பயின்று மனதை அடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
மனது அடங்காது என்பது ஞானியருக்கும் தெரியும். அதே சமயம் மூச்சை அடக்கினால் மனது அடங்கும் என்ற ரகசியமும் அவர்களுக்குத் தெரியும். அதைப் பயில்பவர்கள் முக்காலமும் உணர்ந்த மகான்களாகத் திகழ்வார்கள் என்பது காஞ்சி பரமாசார்யார் போன்ற யோகியர் மூலம் அறிய முடிகிறது.
காற்று எங்கும் பரந்து வியாபித்திருக்கிறது.

அது, உடலால் உணரப்பட முடியாத இடத்திலும், நாசியால் இயல்பாக உள்ளிழுக்கப்படுவது, வெளியே விடப்படுவது. அத்தகைய சூட்சுமம் மிக்கது காற்று என்ற வாயு. இடிபாடுகளுக்கிடையே புதைந்திருக்கக்கூடிய ஒருவன், பல நாட்களுக்குப் பிறகும் மீட்கப்படும்போது உயிரோடு இருக்கிறான் என்றால், அந்த இடிபாடுகளுக்கிடையேயும் கொஞ்சம் காற்று அவனுடைய உயிரைத் தக்கவைக்க உதவியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! ஆக, அங்கும் காற்று இருக்கிறது!

இத்தனை ஆற்றல் வாய்ந்த பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை பகவான் கிருஷ்ணனே சிபாரிசு செய்திருக்கிறார்! ஆமாம், குருக்ஷேத்திரத்தில் போர்புரிய மறுத்து மனக்குழப்பத்தில் ஆழ்ந்துவிட்ட அர்ஜுனனுக்குத் தான் உபதேசித்த கீதையில், பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தை அறிவித்திருக்கிறார்: –

‘‘அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ரணேபானம் ததாபரே
ப்ரணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா”

(அத்தியாயம் 4, ஸ்லோகம் 29)

என்ன சொல்கிறார் கிருஷ்ணன்?

‘‘சில யோகிகள் தம் சுவாசத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தம் மூக்கினால் உள்ளிழுக்கும் காற்றையும், வெளியிடும் காற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உள்ளிழுக்கும் பிராணவாயு மற்றும் வெளியிடும் அபான (கரியமில) வாயு ஆகிய இரண்டின் போக்கை பிராணாயாமப் பயிற்சியால் கட்டுப்படுத்தி மனோதிட ஆற்றல் படைத்தவர்களாக விளங்குகிறார்கள்.’’

மனதுக்கும் இந்த வாயுவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைத்தான் கிருஷ்ணன் இங்கே சுட்டிக்காட்டுகிறார். எதற்காகவாவது, எதனாலாவது பயம் ஏற்பட்டால், மனம் பாதிப்படைகிறது, கூடவே, அதுவரை சீராக இருந்த சுவாசமும் தடுமாறுகிறது. இயல்பாக ஓசையற்றிருந்த அந்த மூச்சு இயக்கம், ‘புஸ், புஸ்ஸெ’ன்று தாறுமாறானதாகி விடுகிறது.

எல்லா நன்மை தீமைகளுக்கும், எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும், எல்லா மான அவமானங்களுக்கும் மனமே காரணம். இவை மட்டுமல்ல இயல்பான சுவாச ஓட்டத்துக்கும் அதே மனம்தான் காரணமாக இருக்கிறது! சந்தோஷத்தால் திகைக்கும் போதும், அச்சத்தால் ஓட நேரும்போதும் ‘மேல்மூச்சு, கீழ்மூச்சு’ வாங்குவது பலருடைய அனுபவமாக இருக்கிறது.

ஆனால் சுவாசத்தை நேர்ப்படுத்துவதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை. பிராணாயாமப் பயிற்சியை மேற்கொள்ளும்போது ஆரம்பக் கட்டத்திலேயே மனசு ஒடுங்குவதை உணர முடியும். ஆமாம், உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியிடப்படும் காற்றிலேயே நம் முழு கவனமும் பதிந்திருக்கும். உள்ளிழுக்கும் காற்றை எத்தனை விநாடிகள் நுரையீரலுக்குள் சிறைப்பிடித்து வைத்திருக்க முடியும், வெளியிட்டபின் எத்தனை விநாடிகள் காற்றை உள்ளிழுத்துக்கொள்ளாமல் தாக்குப் பிடிக்க முடியும் என்று இந்தப் பயிற்சியின் பரிமாணம் விரிவடையும்.

இவ்வாறு காற்றை உள்ளிழுப்பதை ‘பூரகம்’ என்றும்,வெளியிடுவதை ‘ரேசகம்’ என்றும் சொல்வார்கள். நீண்டநேரம் மூச்சுக்காற்றை உள்ளே இருத்தி வைத்துக்கொள்வதையும், வெளியேற்றிய பிறகு நீண்டநேரம் உள்ளிழுக்காததையும் ‘கும்பகம்’ என்பார்கள். நிதானமான சுவாசம் மனதை அமைதிப்படுத்துவதோடு, ரத்தக் கொதிப்பையும் உண்டாக்குவதில்லை, பிற எந்த உடற்கூறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது இக்காலத்திய அனுபவ உண்மை.

இதனை கிருஷ்ணன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார், அர்ஜுனனுக்கு அறிவுறுத்தும் விதமாக. யாருக்கெல்லாம் சுவாசக் கட்டுப்பாடு கைவருகிறதோ, அவருக்கு மனக்கட்டுப்பாடும் எளிதாகும், அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கும், ஆனால் விபரீத பின் விளைவுகள் இருக்காது. ஆக்கபூர்வமான சிந்தனைகளும், செயல்களும் அவற்றால் பொதுநலனும் உண்டாகும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இப்படி நிதானமாக, சீராக, பிராணாயாமப் பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு யோகிக்கு அது இயல்பாகவே நிதான சுவாசமாக அமைந்துவிடுகிறது சாலையில் நடப்பவர், அந்தத் தொலைவைக் கடக்க உதவும் தன் கால்களைப் பற்றிய உணர்வே இல்லாமல், வெகு இயல்பாகச் செல்வதுபோல. இந்த மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்)யின் தொடர்ச்சிதான் தியானம். மூச்சை உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் மற்றும் அதேபோல வெளியே விடுவதற்கும், உள்ளிழுப்பதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் – இவற்றை ஆழ்நிலை தியானத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்.

இப்படி சுவாசம் நிற்கும் விநாடிகளில் ‘பரம’ ஆனந்த நிலை ஏற்படுகிறது. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்நிலையை பலமுறை எட்டியவர் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாலைந்து நாட்களுக்குக்கூட அவர் அப்படியே உணர்வற்றுக் கிடப்பாராம். சுற்றி நிற்பவர்கள் திகைத்துப் போவார்கள்.  அவருடலில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகமும் வந்துவிடும். மெல்ல அவர் உடலை ஸ்பரிசிக்கும்போது அது சூடாக இருப்பதிலிருந்து அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நிம்மதியடைவார்களாம். வெகு நாட்கள் நீடிக்கும் அந்த பரமானந்த சமயங்களில் அவரை ‘எழுப்ப’ வேண்டியிருக்கும் என்பார்கள் அவரது சீடர்கள்.

உண்மைதான். சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் அந்த ஓரிரு விநாடிகளில் நம் சிந்தனையும் கட்டுப்படுகிறது. ஆமாம், அந்த நேரத்தில் நாம் முற்றிலும் ‘ப்ளாங்க்’ ஆகிவிடுகிறோம். ஆனால், அந்த நிலை நீடித்திருக்க முடியாது என்பதால், நுரையீரல் காற்றுக்காக ஏங்கித் திணறும் என்பதால், நம் இயல்பான சுவாசத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், அந்த சூன்யம் – ப்ளாங்க்னஸ் – ஒரு நல்ல அனுபவம். ஒரு பயிற்சியாக இதனை மேற்கொண்டோமானால் அந்தப் பயிற்சி விநாடிகளிலாவது நாம் சிந்தனை வசப்படாமல் இருக்க முடியும், அதன் மூலம் புலன்களின் மீதான மனதின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும்.

கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பதன் தத்துவமும் இதுதானோ? மூச்சை உள்ளிழுத்து, பிறகு அதையே புல்லாங்குழல் வழியாக ஓர் இனிய இசையாக வெளியிடும்போது அது கேட்போரையெல்லாம் கிறங்க வைக்கும். அதாவது, மூச்சை நம் ஆளுமைக்குள் கொண்டுவந்தால், நமக்கு மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் விளையும் என்பதை கிருஷ்ணன் மறைமுகமாக உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது.

ஏனென்றால் பிராணாயாமப் பயிற்சியால் ஒருவருடைய மனம் மென்மையாகிறது, அவரால் தீயவற்றை சிந்திக்க இயலாது, அதனால் அவரது சொல்லும், செயலும் ஆக்கபூர்வமானதாகவே இருக்கும் என்று புல்லாங்குழல் மோகன இசையை எடுத்துக்காட்டாகத் தெரிவிக்கிறார் கிருஷ்ணன்.

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

three + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi