Wednesday, September 25, 2024
Home » 2023-24-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

2023-24-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 விருதாளர்களுக்கு ரூ.22.65 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில். 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டி தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலானது தொன்மையும், வரலாற்று பாரம்பரிய சிறப்பும், நுணுக்கமான பல்வேறு வேலைப்பாடுகளையும் கொண்டதாகும். கைத்தறி தொழிலில் தமிழ்நாடானது பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற இரகங்களான காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருபுவனம் பட்டு மற்றும் பவானி ஜமக்காளம் போன்ற இரகங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

தமிழ்நாட்டில் 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் சீரிய திட்டங்களின் வாயிலாக தொடர் வேலைவாய்ப்பும், உத்திரவாதமான கூலியும் உறுதி செய்யப்பட்டு வருவதுடன். நெசவாளர் நலத்திட்டங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

* சிறந்த நெசவாளர் விருது

அரசால் கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும்
ஏராளமான திட்டங்களில் ஒரு பகுதியாக புதுமையான மற்றும் கண்கவர்
வடிவமைப்புகளை புகுத்தி தற்போதைய சந்தை தேவைக்கேற்ப பட்டு
மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “சிறந்த நெசவாளர் விருது” ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 5 இலட்சம் ரூபாயும். இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 3 இலட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 2 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

* சிறந்த வடிமைப்பாளர் விருது

ஜவுளித்துறையில் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிப்பதற்கும்
மற்றும் மாறிவரும் நவீன ரசனைக்கேற்ப புதிய வடிவமைப்புகளை
உருவாக்குவதற்காக அரசால் சிறந்த வடிமைப்பாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

* சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது

ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், காலமாற்றத்திற்கேற்ற வண்ணங்களின் வடிவமைப்பு மற்றும் போக்கினை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டும், அவற்றை தற்கால சந்தை மற்றும் ஆடை அலங்கார நிலவரங்களுக்கேற்ப கைத்தறி துணிகளாக உற்பத்தி செய்யும் பொருட்டும் தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான “சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது” 2022-23-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருதிற்கு முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 1 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

* சிறந்த நெசவாளர் விருது பெறுவோர் விவரங்கள்

2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ட்டி. சந்திரசேகரன் அவர்களுக்கும். இரண்டாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.டி.குமரேசன் அவர்களுக்கும். மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். புகழேந்தி அவர்களுக்கும்;

பருத்தி இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ட்டி.ஜே.பிரேமா அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை பரமக்குடி, லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.எஸ். அலமேலு அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை கோயம்புத்தூர், வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி. மகாலெட்சுமி. அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

* சிறந்த வடிவமைப்பாளர் விருது பெறுவோர் விவரங்கள்

மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். குமரவேல் அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வடிவமைப்பாளர் டி. பார்த்திபன். அவர்களுக்கும். மூன்றாம் பரிசினை தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். கமலவேணி, அவர்களுக்கும்:

என 9 விருதாளர்களுக்கு 20 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

* சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது பெறுவோர் விவரங்கள்

மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நவநாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு இளநிலை அறிவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி கே.தர்ஷணா அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை மதுரையை சேர்ந்த ந. சங்கர். சுயசார்பு வடிவமைப்பாளர் அவர்களுக்கும்.

மூன்றாம் பரிசினை கோயம்புத்தூர். பி.எஸ்.ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆடை அலங்கார வடிவமைப்பில் இளங்கலை தொழில்நுட்பவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி பி.ரா.ஹரிணி அவர்களுக்கும்; என 3 விருதாளர்களுக்கு 2.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் துறை நா.முருகானந்தம், கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித்துறை இயக்குநர் அ.சண்முக சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

17 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi