சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் சென்னை ஐஐடி 6வது முறையாக முதல் இடம்: இன்ஜினியரிங் பட்டியலில் 14வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘என்.ஐ.ஆர்.எப்-2024’ தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐஐடி 6வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில் முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

ஒட்டுமொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் என பல்வேறு பிரிவுகளில் சிறந்த நிறுவனங்களின் தரவரிசையை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ‘என்.ஐ.ஆர்.எப்-2024’ தரவரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பெற்று இருக்கிறது. 2-வது இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், 3-வது இடத்தில் மும்பை ஐ.ஐ.டி.யும் உள்ளது.

இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 18-வது இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (வி.ஐ.டி.) 19-வது இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 21-வது இடத்திலும், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 22-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 6-வது முறையாக ஒட்டு மொத்த தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

பல்கலைக்கழக பட்டியலை பொறுத்தவரையில், 100 பல்கலைக்கழக பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 7-வது இடத்திலும், வி.ஐ.டி. 10-வது இடத்திலும், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 11-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 12-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடத்திலும் இருக்கிறது. கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி இந்து கல்லூரி முதல் இடத்தை பெற்றிருக்கிறது. கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7-வது இடத்திலும், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 11-வது இடத்தையும், லயோலா கல்லூரி 8-வது இடத்திலும், இதே வரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி 13-வது இடத்திலும் இருக்கிறது.

ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தையும், வி.ஐ.டி. 13-வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 17-வது இடத்தையும் பெற்றுள்ளது. இன்ஜினியரிங் பட்டியலில், 100 கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 9-வது முறையாக தக்க வைத்துள்ளது. இதில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 9-வது இடத்திலும், வி.ஐ.டி. 11-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடத்திலும் உள்ளது.

இதேபோல், மேலாண்மை பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. 16-வது இடத்திலும், பார்மசி பிரிவில் ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி 4-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 11-வது இடத்திலும் இடத்திலும், பல் மருத்துவம் பிரிவில் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் முதல் இடத்திலும், எஸ்.ஆர்.எம். பல் மருத்துவ கல்லூரி 7-வது இடத்திலும், சட்டப்பிரிவில் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 13-வது இடத்திலும், தஞ்சாவூர் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்வி 14-வது இடத்திலும், கட்டிடப்பிரிவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 8-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 11-வது இடத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மருத்துவம் சார்ந்த தரவரிசையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் முதல் இடத்தையும், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி 3-வது இடத்தையும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 8-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 10-வது இடத்தையும், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 12-வது இடத்தையும், பெற்று இருக்கிறது. மாநிலங்களில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களின் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முதல் இடத்தையும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம் 8-வது இடத்தையும், நவீனமயமாக்கப்பட்ட பிரிவின் கீழ் வருகின்ற 10 கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்