வாரணாசியில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: காங். போராட்ட அறிவிப்பு

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாகும். இங்குள்ள பனாரஸ் இந்து பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவியை, கடந்த நவம்பர் 1ம் தேதி 3 மர்ம நபர்கள் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, மாணவியின் செல்போனையம் பறித்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாரணாசியில் உள்ள பாஜ அலுவலக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணால் பாண்டே, செயற்குழு உறுப்பினர் அபிஷேக் சவுகான், இணைஒருங்கிணைப்பாளர் சஷாம் படேல் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பெண்களை பாதுகாப்போம் என முழங்கி வரும் மோடியின் தொகுதியிலுள்ள பாஜ தொழில்நுட்ப பிரிவினர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். பாஜவின் ஆதரவின்கீழ் பாலியல் பலாத்காரங்கள் செய்யப்படுவதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பனாரஸ் மாவட்டம் மற்றும் நகர காங்கிரஸ் பிரிவு மோடியின் எம்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு