பெசன்ட் நகரில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து: ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.யின் மகள் கைது..!!

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதிரி என்பது தெரிய வந்ததுள்ளது. பெசன்ட் நகரில் அதிகாலை தாறுமாறாக சென்ற கார் ஏறியதில், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யா என்பவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது ஆந்திர எம்.பி.யின் மகள் என தெரியவந்தது.

பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா, பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். 22 வயதான இவர், கலாஷேத்ரா காலணி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே போதையில் கிடந்துள்ளார். அவர் மீது அவ்வழியே வந்த கார் ஒன்று ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து காரில் வந்த இரு பெண்களில் ஒருவர் காருடன் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். மற்றொரு பெண் அப்பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சூர்யாவின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறி, சாஸ்திரிநகர் காவல்நிலையத்தில் திரண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த நிலையில், அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், விபத்து நடைபெற்று 10 மணி நேரத்தை கடந்த நிலையில் சிசிடிவி காட்சிகள், கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் அவர்களை ஏன் கைது செய்யவில்லை என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் பெசன்ட் நகர் காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.

இந்நிலையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதிரி என்பது தெரிய வந்ததுள்ளது. கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை