வரும் 8ம்தேதி வரை நடக்கிறது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய பொன்விழா ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த பொன்விழா (2023) ஆண்டு ‘அன்னை மரியா நம் பயணத்தின் வழித்துணை’ என்ற மையக் கருத்தில் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.30 மணி, 6.30 மணி, 11 மணி அளவில் தமிழில் திருப்பலியும் மற்றும் காலை 7.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும் நடந்தன. மாலை 4.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கொடி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆலய வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எலியட்ஸ் பீச் சாலை மற்றும் பெசன்ட் நகர் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து, சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் புறாக்கள், பலூன்கள் மற்றும் பலூன்களால் ஆன ஜெபமாலைகள் பறக்க விடப்பட்டன. மாலை 5.45 மணிக்கு, மாதா மற்றும் குழந்தை ஏசு திருஉருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீள கொடியை 75 அடி உயர வெண்கல கம்பத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். அப்போது ஆலய மணிகள் ஒலிக்க பக்தர்கள் மரியே வாழ்க, பெசன்ட் நகர் ஆரோக்கிய தாயே வாழ்க.. என கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து, சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காலையிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாகவும், அரசு பேருந்து மற்றும் சொந்த வாகனங்களிலும் வந்து குவிந்தனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் தண்ணீர், ஜூஸ், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கினர். அடையாறு பாலம் அருகில் முறைப்படுத்தப்பட்டு பக்தர்கள் வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், வாகனங்களை நிறுத்த காவல் துறை சார்பில் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 4வது அவென்யூ, பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு ஆகிய இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். உயர் கோபுரங்கள் அமைத்து கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான வின்சென்ட் சின்னதுரை தலைமையில், குருக்கள், சகோதரிகள், பங்கு மக்கள், 350 தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

*7ம் தேதி தேர்பவனி
இன்று (30ம்தேதி) உழைப்பாளர் விழா, 31ம்தேதி நலம் பெரும் விழா, செப்டம்பர் 1ம் தேதி இளையோர் விழா, 2ம் தேதி பக்தசபை விழா, 3ம் தேதி நற்கருணை பெருவிழா, 4ம் தேதி இறையழைத்தல் தினம், 5ம் தேதி ஆசிரியர்கள் தினம், 6ம் தேதி குடும்ப விழா, 7ம் தேதி அன்னையின் ஆடம்பர தேர்பவனி திருவிழா, 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா திருத்தலத்தின் 50ம் ஆண்டு விழா தொடக்கம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்னைக்கு முடிசூட்டு விழா நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா முடிகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை