பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ: துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

பெங்களூரு: ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேலும் இருவரை தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர்களது புகைப்படங்களுடன் அடையாளங்களையும் வெளியிட்டு, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி சில நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மாநில அரசு ஒப்படைத்தது.

இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடையதாக நேற்று முன்தினம் முசாமில் ஷரீப் என்ற நபரை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களையும் அவர்களது அடையாளங்களையும் வெளியிட்டுள்ள என்ஐஏ அதிகாரிகள், குற்றவாளிகள் குறித்த தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக என்.ஐ.ஏ தனது எக்ஸ் பக்கத்தில், முசாவிர் ஷஜிப் உசேன் என்ற நபர் தான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி. 6.2 இன்ச் உயரமும், நல்ல கட்டுடலும் கொண்ட 30 வயதான இவர், போலி ஓட்டுநர் உரிமம் கொடுத்து முகமது ஜுனெத் சையத் என்ற போலியான பெயரில் ஆண்கள் விடுதியில் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உண்மையான முகத்தை அடையாளம் காட்டாத வகையில் ஒட்டு தாடி, விக் முடி, மாஸ்க் ஆகியவை அணிந்திருப்பார். மற்றொருவர் பெயர் அப்துல் மதீன் அகமது தாகா. இவர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முசாவிருக்கு உதவியாக இருந்தவர். இவர் விக்னேஷ்.டி என்ற பெயரில் இருக்கிறார். இவர்கள் தொடர்பான துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்