பெங்களூரு மாநகர குடிநீருக்கு 24 டிஎம்சி தண்ணீர் பயன்படுத்த கர்நாடக அரசு அரசாணை வெளியீடு: துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில துணைமுதல்வரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், நேற்று காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஆஜராகும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதுடன் இதற்கான திட்ட வரைவு தயாரித்து ஓன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான வழக்கை விசாரணை நடத்திய காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை வழங்கியுள்ள தீர்ப்பில் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இருந்து பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக 24 டிஎம்சி தண்ணீர் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும், இதற்கான அரசாணை மாநில அரசின் சார்பில் வெளியிடாமல் இருந்தது. நேற்று மாநில அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கி வைக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர முடியும். மேலும் மேகதாதுவில் அணை கட்டினால் அதில் சேமிக்கும் தண்ணீர் எப்படி பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவிப்போம்’ என்றார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்