கோடைக்கு மருந்தாகும் கடலை மாவு!

கோடை காலத்தில் நம் சருமத்தைப் பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக இந்தாண்டு ஜூன் துவங்கியும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக வெயிலால் உண்டாகும் கருமைநிறம், சரும வறட்சிக்கு வீட்டில் இருக்கும் கடலை மாவுகொண்டு பல சருமப்பலன்களை அடையமுடியும்.
1. ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாகத்தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக சிலபேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து ஃபேஷியல் செய்து கொண்டால் முகம் பொலிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சைச் சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய்ப்பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
2. வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரியஒளி பட்டு முகம் கறுப்பாகும். இதனை நீக்க தேங்காய்பால் 1 ஸ்பூன், கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
3. நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்து சருமங்கள் கருமையாகவும் வறட்சியாகவும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலைமாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கிவிடும்.
4. உருளைக்கிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது பார்லரில் ஃபேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்றதூய்மையான முகத்தை பெறலாம்
5. கடலைமாவு ஒரு டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் அரை டேபிள் ஸ்பூன், உடன் தயிர் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் சிறிதளவு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் பேக் போட்டுக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளப்பாக மாறும். வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை கூட இந்தப் பேக் போடலாம். சோப்பிற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்.
– பொ.பாலாஜிகணேஷ்

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி