அரையிறுதி கனவில் பாகிஸ்தான்: வாய்ப்பு தருமா வங்கம்

நேருக்கு நேர்

* பாக்-வங்கம் இரு அணிகளும் சர்வதேச களத்தில் இதுவரை 36முறை சந்தித்துள்ளன. அவற்றில் பாக் 33லும், வங்கம் 5லும் வென்று இருக்கின்றன.

* இரண்டு நாடுகளில் இல்லாமல் 3வது நாடுகளில் நடந்த 14 ஒருநாள் ஆட்டங்களிலும் பாக் தான் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் வங்கம் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பையின் 31வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் களம் காண உள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டனில், அக்.28ம் தேதி நடந்த 28வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் ஏற்கனவே விளையாடியது. நெதர்லாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் வங்கத்துக்கு அதிர்ச்சி தோல்விதான் பரிசாக கிடைத்தது. எதிர்பாராத அந்த தோல்வியால் வங்கம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. ஷாகிப் அல் அசன் தலைமையிலான வங்க அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என தன்னை விட சற்று வலுவான அணிகளை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் பல வலுவான அணிகளுக்கு சிறிய அணிகள் அதிர்ச்சி தோல்வியை பரிசாக தந்துள்ளன. ஒருவேளை எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றாலும், வங்கம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை. வங்கம் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஆப்கானை வென்றுள்ளது. அந்த ஆப்கான் வீழத்திய பாகிஸ்தான் அணியுடன் தான் இன்று வங்கம் மோத இருக்கிறது. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான், இன்று அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற நிலையில் உள்ளது. பாக் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றிப்பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 4புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க எஞ்சிய 3 ஆட்டங்களில் வங்கதேசம் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை வீழ்த்த வேண்டும். அப்படி வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விதான் பாகிஸ்தான் கனவை முடிவு செய்யும்.

அதற்கு முதலில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் பாக் களம் காண காத்திருக்கிறது. அதற்கு வங்கம் வாய்ப்பு தராவிட்டால், தன்னுடன் பாகிஸ்தானையும் வெளியேற்றி விடும். அதனால் அரையிறுதி கனவை நிஜமாக்க இன்றைய ஆட்டம் மட்டுமல்ல இனி வரும் ஆட்டங்களும் பாகிஸ்தானுக்கு போராட்டங்களாக தான் இருக்கும்.

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை