ஆரம்பமே அமர்க்களம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. இதில் பா.ஜ மட்டும் 240 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது. புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றதால் மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்தது பாஜ தலைவர்கள் மத்தியில் கசப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரம் கழித்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது.

இதில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை என்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு குறித்து இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. கடந்த காலங்களில் மக்களவை சபாநாயகர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு விட்டு கொடுத்தால் கருத்தொற்றுமை அடிப்படையில் சபாநாயகர் தேர்வு செய்து கொள்ளலாம் என இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது. இது நடக்காதபட்சத்தில் தேர்தல் மூலம் தேர்வு செய்வது தவிர்க்க முடியாததாகும்.

இதையடுத்து, நாடாளுமன்ற புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்காக நேற்று சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப்பை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநில பாஜ எம்பியான இவர், நேற்று முதல் புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதில் சோனியா காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் உறுதிமொழி ஏற்க வருமாறு தற்காலிக சபாநாயகர் விடுத்த அழைப்பை மூத்த எம்பிக்களான கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று நிராகரித்தனர். முதல் நாளிலேயே மோடி அரசுக்கு இந்தியா கூட்டணி நெருக்கடி கொடுத்துள்ளது. தற்போது நீட் முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நீட் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்துகிறது. தொடர்ந்து கடைசி நேரத்தில் நீட் முதுகலை நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் வினாத்தாள் கசிந்ததா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. புதிய சட்டங்களையும் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபோன்று காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ரயில் விபத்துகள் என அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் இருப்பதால் புதிய ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் கடும் அமளிகளுடன் ஆரம்பிக்கும். பாஜவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாததால் இனி நாடாளுமன்றத்தில் போர் காட்சிக்கு பஞ்சம் இருக்காது.

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு