‘பிச்சை எடுக்கும் தமிழக தாய்மார்கள்’: குஷ்புவின் திமிர் பேச்சு கொந்தளிக்கும் பெண்கள்

பாஜ பிரமுகரும்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும்மான குஷ்பு பேசும் போது எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. கற்பு பற்றி கருத்து கூறி வழக்குகளை சந்தித்தார். சேரி மொழி என்று சொல்லி கொந்தளிப்பு ஏற்படுத்தினார். இப்போது ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு பிச்சை போடுகிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பாஜ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாஜ தேசிய மகளிரணி உறுப்பினர் குஷ்பு, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,‘தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 கொடுத்தால், பிச்சை போட்டால் அவங்க திமுகவுக்கு வாக்களிச்சிருவாங்களா?’ என்று குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உரிமை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார்.

குறிப்பாக, தமிழக அரசால் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை ‘பிச்சை’ என்று குஷ்பு தெரிவித்தது பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். திமுகவினரை தாண்டி இத்திட்டத்தால் பலன் பெறும் மகளிர் பலரும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பக்கத்து கிராமங்களில் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு பெரிதும் பயனை தந்து கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரிய அளவில் சம்பள தொகை மிச்சப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்ல மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த பணம் பல்வேறு வகையில் உதவியாக இருப்பதால், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாஜ ஆளும் மாநிலத்தில் கூட நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக இந்த திட்டம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் சட்டீஷ்கரில் இந்த திட்டத்தை பிரதமர் மோடியும், டெல்லியில் முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் தொடங்கி வைத்தனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குஷ்பு சொல்வது போல் பிரதமர் மோடி பெண்களுக்கு பிச்சையாக போடுகிறாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பங்களாவில் வசித்து கொண்டு குடிசையில் வாழும் மக்களை பற்றி சிந்திக்காமல் இப்படி பேசியிருப்பது பெண்களை அவமானப்படுத்தும் வகையில் திமிராக பேசுவதா என்று பெண்கள் கொந்தளித்து உள்ளனர்.

* மரியாத கெட்டுரும்: பெண் ஆவேசம்
குஷ்புவை திட்டி பெண் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் அந்த பெண் பேசுகையில், ‘‘எவ்ளோ திமிரு இருந்தா மகளிர் உரிமை தொகை ஆயிரத்தை பிச்சை காசு என்று சொல்லுவ.. கவர்ச்சி காட்டி கூத்தடிக்கிற உனக்கு இந்த ஆயிரம் ரூபா பிச்சை காசா தான் தெரியும். கொள்கை எதுவும் இல்லாமல் நாளுக்கு நாள் ஒவ்வொரு கட்சியாக தாவி போன உனக்கு இந்த காசு பிச்சை காசா தான் தெரியும்.

எங்கள மாதிரி ஆளுங்க ஆயிரம் ரூபா வாங்குறவங்களுக்கு தான் அதோட மதிப்பு தெரியும். உனக்கு தெரிய வாய்ப்பில்லை. மருந்து, மாத்திரை வாங்குறதுக்கு, மாச கடைசில செலவுக்கு என எல்லாத்துக்கும் இந்த பணம் உதவுது. குடியும், கூத்துமா வாழ்கிற உனக்கு எங்களோட குடும்ப கஷ்டம் தெரிய வாய்ப்பே கிடையாது. இன்னொரு முறை மகளிர் உரிமை தொகை ஆயிரத்தை பற்றி கொச்சைப்படுத்தி பேசின உனக்கு மரியாத கெட்டுரும். செருப்பு பிஞ்சிரும்’’ என ஆவேசமாக பேசி உள்ளார்.

* அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
அமைச்சர் கீதா ஜீவன் அளித்த ேபட்டி: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் அவருக்கு தெரியவில்லை. குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை. பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று அந்த அம்மா சொல்கிறார், 1989ல் சொத்துரிமை, கல்வி உரிமை கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளித்தது திமுக. அதை எதிர்த்து பேச இந்தியாவில் ஒருத்தரும் கிடையாது.

அதன் பிறகு தான் இந்திய அளவில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கான உரிமைக்கு அடித்தளமிட்டது திமுக. எந்த மாநிலமும் இந்திய அளவில் அளிக்காத பொருளாதார சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்தது திமுக. மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நிலை அறியாமல், பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள், எந்த அளவிற்கு இந்த பணம் உபயோகப்படுகிறது என தெரியாமல் பேசி இருக்கிறார் குஷ்பு. இதற்கெல்லாம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் அவருக்கு பதிலளிப்பார்கள் என்றார்.

* தமிழ்நாட்டில் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை
திட்டத்தை பார்த்து காப்பி அடித்து சட்டீஸ்கரில் மகளிருக்கு ரூ.1000 திட்டத்தை சமீபத்தில் மோடி தொடங்கி வைத்தாரே? இதுவும் மக்களுக்கு பிச்சை போட்டு வாக்கு கேட்பது தானா என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை