சிதைவிலும் அழகு

சிற்பமும் சிறப்பும்

காலம்: கோவிலின் ஆரம்பகால கட்டுமானம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. தற்போதைய கோவில் பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆலயம்: ருக்மிணி மந்திர், துவாரகை நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவு, தேவபூமி துவாரகா மாவட்டம், குஜராத்.

ருக்மிணி கோவில், துவாரகாவின் துவாரகாதீஷ் கோவிலைப் போல் பெரியதாக இல்லாவிட்டாலும், கட்டடக்கலை அழகு மற்றும் சிற்பக்கலை நுணுக்கம் காரணமாகத் துவாரகாவில் தவறாமல் பார்க்க வேண்டிய ஆலயம்.மகாலட்சுமியின் அவதாரமாகக் கருதப் படும் ருக்மிணி, துவாரகையை ஆட்சி புரிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் காதல் மனைவியும், துவாரகையின் பட்டத்தரசியும் ஆவார்.

மூலவர்: ஸ்ரீகிருஷ்ணர் – ருக்மிணி.

பொதுவாக வட இந்தியக் கோயில்களால் பின்பற்றப்படும் ‘நாகரா’ பாணி கோயிற்கட்டடக்கலையிலேயே ருக்மிணி கோயில் கட்டப்பட்டுள்ளது. உயரமான விமானத்துடன், வெளிப்புறச் சுவரெங்கும் இடைவெளியின்றி நிறைந்துள்ள புராண, கலைச் சிற்பங்கள் மற்றும் கருப்பொருள் வடிவங்களுடன் பெரிதும் ஈர்க்கின்றன.வெளிப்புறச் சுவர்கள் யானைகளின் அணிவகுப்பு, எழில்மிகு மதனிகா சிற்பங்களுடன் செழுமைப்படுத்தப்பட்டுள்ளன. கோஷ்டத்தில், ருக்மணி நான்கு கரங்களுடன், சங்கு, தாமரை, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியவாறு
காட்சியளிக்கிறார்.

கிருஷ்ணர்-ருக்மணியின் வருடாந்திர திருக்கல்யாண விழா மே-ஜூன் மாதங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது துவாரகாதீஷ் கோயிலில் இருந்து ருக்மணி கோயிலுக்கு சீர்வரிசைகள் பெருமளவு பக்தர்கள் பங்கேற்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

துவாரகையின் கடல்உப்பு நீர்க்காற்று கலந்த வானிலை காரணமாக ஆலயத்தின் வெளிப்புற மணல் கற்களில் நீண்டகாலமாக அரிப்பு ஏற்பட்டு, பல சிற்பங்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவுற்றுள்ளது. இவ்வாலய சிற்பங்களின் வசீகரமான எழில் தோற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.கிருஷ்ணரை வணங்க துவாரகைக்குக் செல்லும் பக்தர்கள், ருக்மணி கோவிலுக்கு சென்ற பின்னரே தங்கள் யாத்திரையை நிறைவு செய்கின்றனர். இங்கு தண்ணீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

வாழ்வினை செதுக்கும் சிற்பிகள்