அழகு தரும் ஆளிவிதைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆளிவிதை உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் தன்மை நிறைந்தது. அந்தவகையில், ஆளி விதை சருமத்திற்கும் அற்புதம் செய்யக் கூடியவை. அவற்றில் லிக்னான்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை இறுக்கமாக்கவும், தோல் தொங்குவதைத் தடுக்கவும் உதவுகின்றன. ஆளி விதையில் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அவை சருமத்துக்கு ஊட்டமளித்து, நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அந்தவகையில், ஆளிவிதையில் வீட்டிலேயே இயற்கை முறையில் ஸ்கின் டைட்னிங் ஜெல் தயாரித்து பயன்படுத்தலாம்.

ஆளிவிதை ஜெல் செய்யும் முறை

தேவையானவை

ஆளி விதை – அரை கப்
தண்ணீர் – 2 கப்.

செய்முறை: 2 கப் தண்ணீர் எடுத்து அதில் அரை கிண்ணம் ஆளிவிதை சேர்க்கவும். மிதமான தீயில் அதை கொதிக்க விடவும். மரக் கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை வெள்ளை நுரையுடன் ஜெல் போன்று மாறும்போது தீயை அணைக்கவும். பின்னர், அதை 20லிருந்து 30 நிமிடங்கள் குளிர விடவும். பின்னர், மெல்லிய காட்டன் துணியைப் பயன்படுத்தி, ஆளிவிதை கலவையிலிருந்து ஜெல்லை மட்டும் பிரித்தெடுக்கவும். அதை சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

இந்த ஜெல்லை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 1 மாதம் வரை சேமித்து வைக்க முடியும். தேவைப்படும்போது, கொஞ்சமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜெல்லை முகம் முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் புத்துணர்ச்சி பெறும். நாளடைவில் முகச் சுருக்கங்கள் மறைந்து, சருமம் கெட்டிப்படுவதை உணர முடியும்.

ஆளிவிதைகள் உடலில் ஈஸ்ட்ரோஜனை சமநிலைப்படுத்தி அதிகப்படியான எண்ணெய், அசுத்தங்கள் மற்றும் கரும்புள்ளிகளை முகத்தில் இருந்து அகற்றுகிறது. சருமத்துளைகளை இறுக்குவது மட்டும் அல்லாமல் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் செய்கிறது.

ஆளி விதைகளை ஃபேஸ் பேக் போன்றவற்றிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளவை. அதனால் ஈரப்பத மூட்டும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும், ஆளி விதைகள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுவதால் அவை சருமத்தின் வறட்சியையும் தடுக்க செய்கிறது.

தொகுப்பு: தவநிதி

Related posts

படிகாரத்தின் மருத்துவ குணங்கள்

கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

எடையும் குடைமிளகாயும்!