காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சியில் தோட்டக்கலை துறையுடன் இணைந்து உருவாகும் அழகிய பசுமை வனம்: கலெக்டர் நேரில் சென்று ஆலோசனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சியில் தோட்டக்கலை துறையுடன் இணைந்து பசுமை வனம் உருவாகிறது. இந்த பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதில் நடப்படும் மரக்கன்றுகளை 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம் பராமரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க சஞ்சீவிராயர் கோயில் உள்ளது. பழமையான வைணவத் தலமான இந்த திருக்கோயில் ராம, ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர் சிறிது இளைப்பாறிய தலம் என புராணங்களில் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு நடவாவி கிணறு அருகே சுமார் 4 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.

இந்த கோயில் நிலத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் அழகிய வனம் உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெற்ற ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, வாலாஜாபாத் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அபரிமிதமான தொழிற்சாலைகள் பெருகி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைப் பணிகள், சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கும் ஏராளமான மரங்கள் அகற்றப்படுகின்றன. மேலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொழிற்சாலை புகை மற்றும் குப்பைகளை எரிப்பதால் அதிகளவில் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு போன்று உடல் நலனில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் காலியாக உள்ள தரிசு நிலங்களில் வளர்க்கவும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வீடுகள் தோறும் இலவசமாக இரண்டு மரக்கன்றுகளையும் கிராம ஊராட்சிகள் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரத்தை அடுத்த இந்த அய்யங்கார்குளம் கிராமத்தில் ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலுக்கு சொந்தமாக சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சி வரதராஜ பெருமாள் எழுந்தருளும் நடவாவி கிணறு அருகே உள்ள சுமார் 4 ஏக்கர் நிலத்தில் வனம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தினை சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, இப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வனமாக உருவாக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி பொதுமக்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன் ஒத்துழைப்புடன், தோட்டக்கலை துறையுடன் இணைந்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மா, பலா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளையும், தென்னை, புங்கை, வேம்பு உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகளையும் தற்போது நட்டுவைத்து அதற்கு 100 நாள் திட்ட வேலை பணியாளர்கள் உதவியுடன் பராமரிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

*750 மரக்கன்றுகள்
இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைதலைவர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பில் இருந்த திருக்கோயில் நிலம் உரிய ஆவணங்களுடன் மீட்கப்பட்டு தற்போது சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் 750 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை சூழலை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும், பறவை இனங்களுக்காக பழவகை மரங்களும் நடப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்காக 27 நட்சத்திர ஸ்தல விருட்ச மர வகைகளும், மூலிகை செடிகளும் இப்பகுதியில் நடப்பட்டுள்ளன என தெரிவித்தார். ஒரு கிராமமே சேர்ந்து பசுமை வனத்தை உருவாக்கும் இந்த முயற்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி