அடித்துக்கொள்ளும் இரண்டு மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அதிகாரி விட்ட டோஸ்ல ஆபீசுக்கே வராத ஆபீசரு கப்சிப்புன்னு ஆன கதை தெரியுமா..’’ என முதல் கேள்வியுடன் வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல ஒடுக்கமான ஊருக்கு பக்கத்துல மந்தை என்று முடியுற மலை கிராம பஞ்சாயத்து இருக்குது.. இங்க பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிச்சுக்கிட்டு வர்றாங்க.. இதனால, மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்குது.. முன்னாடியெல்லாம் சாலைவசதி இலைன்னு சொல்லி அரசு அதிகாரிங்க அங்கு செல்வதற்கு சாக்குபோக்கு சொல்லி வந்தாங்க.. ஆனா குண்டும் குழியுமா இருந்த சாலைகளை இப்போ புத்தம் புதுப்பொலிவுடன் அமைச்சுட்டாங்க.. ஆனாலும், மலைவாழ் ஜனங்க ஒரு சில விஷயங்களுக்கு அலைய வேண்டி இருக்குதாம்..
மலைவாழ் மக்களின் நலனுக்காக மலையிலேயே விஏஓ அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கு.. அங்கு நிரந்தரமா ஒரு ஆபீசரை நியமிச்சு இருக்காங்களாம்.. ஆனா அந்த ஆபீசர் அலுவலகத்துக்கே போறது கிடையாதாம்.. ஒடுக்கமான ஊர்ல இருக்குற அலுவலகத்திலேயே தான் இருக்குறாராம்.. பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்புனு எதுவா இருந்தாலும் மலையில இருந்து கீழ வந்து அந்த ஆபிசரை தேடி ஓடி அலைய வேண்டி இருக்குதாம்.. இந்த விஷயம் வட்டத்தோட ஆட்சியர் காதுக்கு போகவே, அவரை கூப்பிட்டு டோஸ்விட்டிருக்காங்க. இனி எந்த புகாரும் வரக்கூடாது, வந்தா அவ்ளோதான் ரெய்டு விட்டிருக்காங்க.. இப்ப கப்சிப்புன்னு இருக்குற இடமே தெரியாம இருக்காராம் அந்த புது ஆபீசரு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மனுக்கள் கொடுக்கும்போது முக்கியமான பேப்பர் வச்சியான்னு கேட்டு கறார் காட்டுகிறாராமே தாலுகா அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு துணை தாசில்தார் பணிபுரிந்து வர்றாரு.. இவரு தனக்கென்று தனியாக ஒரு நபரை நியமிச்சிக்கிட்டு வசூலில் உச்சம் தொட்டு வர்றாராம்.. குறிப்பா, வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், சிட்டாவில் பெயர் சேர்ப்பது போன்ற மனுக்களில் அதிகம் கறந்து விடுகிறாராம்.. ‘எல்லா பேப்பரும் வெச்சியே… முக்கியமான பேப்பர் வெச்சியா…’ என மறைமுகமாக சம்திங் கேட்பதில் கில்லாடியா இருக்கிறாராம்.. இவரிடம் கரன்சி வெட்டாமல் யாரும் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைச்சிட்டாராம்.. யாரேனும் கரன்சி கொடுக்க மறுத்தால், விண்ணப்பம் டேபிளுக்கு அடியில் செல்வதோடு இல்லாம மாயமாகி போயிடுதாம்.. அதனால், பலர் வேறு வழியில்லாமல் படி அளந்து செல்கிறார்களாம்.. யாரேனும் சம்திங் கொடுக்காமல் முரண்டு பிடித்தால், நீங்க என்னைப்பற்றி யாரிடம் புகார் சொன்னாலும் பருப்பு வேகாதுன்னு கெத்து வேறகாட்டுறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரிடம் திடீரென நெருக்கமான மாஜி அமைச்சரால் மணியானவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் 2 மாஜி அமைச்சர்கள் சேலத்துக்காரர் அணியில் இருந்து வந்தாலும் அவர்களுக்குள் இருந்து வரும் கோஷ்டி பூசலால் இரண்டு அணியாக செயல்பட்டு வர்றாங்க… இதனால் இலை கட்சியில் உள்ள அடிமட்ட ெதாண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை இந்த இரண்டு மாஜி அமைச்சர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருக்காங்க… இந்த கோஷ்டி பூசலுக்கு இடையில் சைலன்டாக இருந்து வந்த முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய ‘ஜெ’ என்ற மாஜியானவர், கட்சியில் திடீரென ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறாராம். இதற்கான காரணம் சமீபத்தில் நடந்த அவரது இல்லத் திருமண விழாவில் சேலத்துக்காரர் வந்து பங்கேற்றதுதானாம்.. இதுதவிர சேலத்துக்காரரிடம் நேரிடையாகவே மாஜியானவர் அவ்வப்போது பேசி வருவதோடு அவரிடம் நெருக்கமாகவும் இருந்து வருகிறாராம்.. இது மற்றொரு மாஜியான மணியானவரின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.. இப்படியே விட்டால் உங்களது மாவட்ட செயலாளர் பதவிக்கு தான் ஆபத்து வரக்கூடும். கடலோர மாவட்டத்தில் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியம் இல்லைன்னு மணியானவரிடம் அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்காங்களாம்.. இதனால் மணியானவர் அந்த மாஜி அமைச்சர் மீது உச்சகட்ட டென்சனில் இருந்து வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் தென்மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தேனிக்காரர் பவர்பற்றி கேள்வி எழுப்ப போறாங்களாமே சில நிர்வாகிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலம்காரரை 6 மாஜி அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய பிறகு, தென் மாவட்டத்தில் தேனிக்காரர் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.. தேனிக்காரரை இலை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு நடந்த மக்களவை தேர்தலில் இலை கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுவும் பல இடங்களில் 2ம் இடம் கூட கிடைக்கல.. அல்வா தொகுதியில் இலை கட்சி 3ம் இடத்தை பிடிக்கவே கடும் இழு….பறி… 10 லட்சம் ஓட்டுக்கு மேல் இருக்கும் அல்வா தொகுதியில ஒரு லட்சம் ஓட்டுக்கூட கிடைக்கல.. வெறும் 8 சதவீதம் தான் மிஞ்சியது. டெபாசிட் கூட பல தொகுதிகளில் கிடைக்காமல் போச்சு.. எங்கள் பவரை காட்டி விட்டோம்ல.. தேனிக்காரர் இல்லாததால் இலை கட்சி மக்களவை தேர்தலில் அடையாளமே இல்லாமல் போயிடுச்சின்னு பீடிகை போடுகின்றனர் தேனிக்காரர் அணியினர்.. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்கூட இல்ல.. இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் இலை கட்சி காணாம போயிடும்.. எப்படியும் நாங்கள் ஐக்கியமாகி விடுவோம்னு தேனிக்காரரைப் போலவே உற்சாக குரல் கொடுக்கின்றனர் அவரது அணியினரும்.. தென் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரத்த எழுப்ப சில நிர்வாகிகளும் தயாராக இருக்காங்களாம்.. ஆனால், சேலம்காரர் இறங்கி வருவாரா, அவரது குறியே தேனிக்காரர்தானே…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

12 எம்பி பதவிக்கு 9 பேரின் பெயரை அறிவித்த பாஜக தேர்தலில் தோற்ற 9 ஒன்றிய மாஜி அமைச்சருக்கு கல்தா: மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் கிடைக்குமா?

பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை விசாரிக்கும் போது அருணா ஷான்பாக்கின் பெயரை தலைமை நீதிபதி கூறியது ஏன்..? 1973ல் பெண் செவிலியருக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி

அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு இயக்குநர் நெல்சன் மனைவி வேண்டுகோள்