Beat the heat

நன்றி குங்குமம் டாக்டர் சம்மர் ஸ்பெஷல்கோடை காலத்தில் நம்மைத் தற்காத்துக் கொள்ளும் பல கவசங்களை இயற்கை நமக்கு அளித்திருக்கிறது. அவற்றில் பலவற்றை பொதுமக்களும், இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்திருப்பதில்லை. பாதாம்பிசினும், ரோஜா குல்கந்தும் அந்த வகையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவப் பொக்கிஷங்கள் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சீனி. நம்முடைய பாரம்பரியத்தில் இன்றுவரை உணவு என்பது வெறுமனே பசியை போக்குவதற்காக மட்டும் அல்ல; ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவு அவருக்கு உணவாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அதுபோல சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உணவுகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போது தவிர்க்க வேண்டும் என நிறைய வரையறைகளும் இருக்கிறது. அப்படி மழை, பனி, கோடை என நம் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற உணவுகளை இயற்கையும் தருகிறது. அப்படி கோடை காலத்தில் நாம் அவசியம் எடுத்துக் கொள்ளும் இரண்டு தவிர்க்க முடியாத சக்திகளாக பாதாம்பிசினும் குல்கந்தும் இருக்கிறது.பாதாம் பிசின் பாதாம் பிசின் மேற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் மிகுதியான அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பலரும் நினைப்பது போல் பாதாம் பிசின் இந்திய பாதாம் மரமான Terminalia Cattappa-வில் இருந்து கிடைப்பதில்லை. பாதாம் பிசினின் தாவரவியல் பெயர் Prunus Amygdalus. இது Rosaceae குடும்பத்தை சார்ந்ததாகும். இலையுதிர் காலங்களில் முதிர்ந்த இனிப்பு வகையான பாதாம் மரத்தின் பட்டைகள் மற்றும் அதன் கிளைகளில் பிசின் கசித்து காய்த்து பட்டைகளில் படித்து இருக்கும். இது நிறமற்றது. சில சமயங்களில் பழுப்பு நிறத்தில் அல்லது வெளிர் பிரவுன் நிறத்தில் இருக்கும் காய்ந்த கோந்து நிறமற்ற சிறு கற்கள் போல் இருக்கும். இது குளிர்ச்சி தன்மையைக் கொண்டது. இதில் அதிகப்படியான மினரல்கள், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் போன்றவை இதில் அடங்கியுள்ளன.வெயில் காலங்களில் மினரல் சத்து குறைப்பாட்டினால் உடலில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்கிறது. புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. பாதாம் பிசின் இயற்கையாகவே வெப்பத்தைத் தணித்து உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.தினமும் 10 கிராம் அளவுக்கு காய்ந்த பிசினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர உடலில் குளிர்ச்சி உண்டாகும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைக்க இவை மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது. வயிற்றுப்புண் மற்றும் அமில எதுக்களித்தலை குணமாக்க தண்ணீரில் ஊறிய பாதாம் பிசின் ஜெல்லியை தேங்காய்ப்பால் மற்றும் வெல்லத்துடன் சேர்த்து பருகி வர குணமாகும். சருமப் பராமரிப்புக்கு பாதாம் பிசின் ஜெல்லியை உடலில் தடவுவதால் வெப்ப கட்டிகள் விரைவாக குணமாகும். தோல் அரிப்பு மற்றும் ரணங்களையும் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதனை நன்னாரி சர்பத்துடன் எடுத்துக் கொள்வதால் வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். பாதாம் பிசினை ரோஸ் மில்க்குடனும், ஜிகர்தண்டாவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பாதாம் பிசின் ஐஸ்கிரீமுடனும், பாதாம் பிசின் நன்னாரி சர்பத்துடனும் பாதம் பிசின் பால் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.ரோஜா குல்கந்துரோஜா மலரிலிருந்து செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க உணவுப்பொருள்தான் குல்கந்து. மணம் தரும் பொருளாக உணவுப் பதார்த்தங்களில் சேர்ந்து சமைப்பர். குல்கந்துவின் தாவரவியல் பெயர் Rosa damascena. இதில் Aromatic volatile Essential, Tannic acid, Gallic acid; போன்ற மூலக்கூறுகள் இதில் அடங்கியிருக்கிறது. கொப்பளங்கள், நாப்கின் பயன்பாட்டால் வரும் புண்கள், சரும அரிப்பு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது. ரோஜா குல்கந்து பருகும் பானங்கள் மற்றும் உணவுகளில் நறுமண பொருட்களாக சேர்க்கப்படுகிறது. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் நிறைந்துள்ளது.ரோஜா குல்கந்து துவர்ப்பு சுவையுள்ளமையால் ரத்தக்குழாய்களுக்கும் இதயத்திற்கும், கல்லீரலுக்கும் வலிமையூட்டும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பசியைத் தூண்டும். வயிற்றில் வாயுவை சேர விடாது.; இத்தகைய சிறப்புடைய ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயாரிப்பதால் அடையும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத ரோஜா பூ இதழ்கள் 200 கிராம், பெரிய கற்கண்டு 100 கிராம் மற்றும் தேன். இம்மூன்றையும் தேவையான அளவு ஒன்றாகக் கலந்து இடித்து வைத்துக் கொள்ளவும். இதனை பெரியவர்கள் 2 ஸ்பூன் அளவும், சிறியவர்கள் ஒரு ஸ்பூன் அளவும் உட்கொள்ளலாம். குல்கந்து காரத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. செரிமானம் சீரான முறையில் நடக்க உதவுகிறது. செரிமான சமநிலையில் வைத்து பசியை தூண்டுகிறது.வெற்றிலையுடன் குல்கந்து 10 கிராம் அளவில் உள் மருந்தாக எடுத்துக் கொண்டால் வயதானவர்களுக்கு வயிற்றில் வாயுத்தொல்லை நீக்கும். குல்கந்தை வெந்நீருடன் சேர்த்து எடுத்து கொண்டால், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை மலம் இறுக்கம் தளரும், மலச்சிக்கல் போக்கும். இதற்கு தொடர்ந்து இரவில் 5 முதல் 10 கிராம் வெந்நீருடன் சாப்பிட்டு வரலாம்.வெந்நீருடன் சாப்பிட்டு வர கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். வெயில் காலங்களில் வெப்பத்தினால் ஏற்படும் பலவீனத்தைத் தடுக்க கண்டிப்பாக குல்கந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறுநீரகக் கடுப்பை குணப்படுத்த முடியும். நன்னாரி சர்பத்தை குல்கந்துடன் சேர்த்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை பருகி வர முழுமையாக குணமாக்கும். உடலுக்கு வலிமையை உண்டாக்குகிறது. உடல் அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு மருந்தாகிறது. தோல் நோய்களான உடல் அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு அவிபத்திகர சூர்ணம் என்ற ஆயூர்வேத மருந்துகளுடன் குல்கந்து எடுத்துக்கொள்ள சரியாகும். குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தோலின் சுருக்கங்களை போக்கி சரும பளபளப்பு அதிகரிக்கும். வியர்வையினால் ஏற்படும் உடல் துர்நாற்றம் போக நறுமணம் கொண்ட குல்கந்து நன்மை அளிக்கும். உடல் உஷ்ணம் அதிகம் உள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் குல்கந்து சாப்பிட்டு வர விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடும் சரியாகும்.– க. இளஞ்சேரன்

Related posts

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!

வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க!

வலைமொழிச் சிக்கல்கள்… இணையத்தில் உரையாடுவது எப்படி?