பொதுமக்களை அச்சுறுத்திய கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

பந்தலூர் : பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியான பந்தலூர் இன்கோ நகர், ரிச்மண்ட், அண்ணா நகர், அம்பேத்கார் நகர், கூவமூலை, பெருங்கரை, அத்திக்குன்னு, அத்திமாநகர், நெல்லியாளம், ஏலமன்னா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் கரடி புகுந்து சமையலறையில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளை ருசித்து சென்றது. மேலும் கோயில்களில் புகுந்து எண்ணெய்யை குடித்து சென்றது. இதையடுத்து குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பந்தலூர் அருகே அத்திமா நகர் கோயிலுக்குள் புகுந்த கரடி விளக்கு எரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய்யை குடித்தது. தொடர்ந்து அப்பகுதியில் உலா வந்த கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் உத்தரவின்பேரில் தேவாலா ரேஞ்சர் சஞ்ஜீவி தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்தனர்.

ஆனால் கூண்டில் கரடி சிக்காமல் வனத்துறைக்கு போக்குகாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூண்டில் கரடி சிக்கியது. அந்த கரடியை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரிதும் நிம்மதி அடைந்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்