வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால், நீலகிரி உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு, கேரள எல்லையிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அதிகபட்சமாக நீலகிரி, கோவை, மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, மாவட்டத்தில் ஓரிரு இடத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடப்பட்டது.

மேலும், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இது தவிர வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களிலும் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, பகுதிகளிலும் மத்திய சென்னையில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது.

இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அத்துடன், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு