வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் தணிந்து அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம், வடக்கு ஓடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது