பாஸ்கெட்… டைனமைட்… மட்டன் பொட்டலம்…

பிரியாணிகள் பல ரகம்!அத்தனையும் அசத்தல் ரகம்!

ரெஸ்டாரென்ட் நடத்துவது சாதாரண காரியமல்ல. நிச்சயம் முன் அனுபவம் இருந்தால்தான் சிறப்பான சேவையைத் தர முடியும். தலைமுறை தலைமுறையாக ஹோட்டல் நடத்தியவர்களே நாளடைவில் சறுக்கலைச் சந்தித்து இருக்கிறார்கள். மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள மாயா விலாஸ் ரெஸ்டாரென்டை ஆரம்பித்து 4 மாதம்தான் ஆகிறது. ஆனால் உணவுப்பிரியர்களிடம் நன்றாக ரீச் ஆகியிருக்கிறது. பலர் குடும்பத்துடன் தேடி வந்து சாப்பிடுகிறார்கள். இவர்கள் தரும் ஆத்தண்டிக்கான டேஸ்ட்தான் இதற்குக் காரணம். செட்டிநாட்டு ருசியென்றால் இதுதான் எனக் கூறும் வகையில் காரம் சாரமாக இருக்கின்றன அத்தனை உணவுகளும். சாப்பிடும்போது நறுக்கென்று இருக்க வேண்டும் என்பார்களே அப்படி இருக்கிறது இங்கு கிடைக்கும் ஒவ்வொரு உணவின் ருசியும். ராதாகிருஷ்ணன் சாலையில் சவேரா ஹோட்டலுக்கு நேர் எதிராக சிஐடி காலனியில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்டாரென்டுக்கு சென்றிருந்தோம். சாதாரண நாள்தான். ஆனால் பலர் குடும்பத்தோடு வந்து இங்கு கிடைக்கும் பாஸ்கெட் பிரியாணி, டைனமைட் பிரியாணி உள்ளிட்ட யுனிக்கான டிஷ்களை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இப்படியொரு சூழலில் மாயா விலாஸின் உரிமையாளர் அஜய் விஸ்வநாத்தை சந்தித்தோம்.

“அப்பா ராஜரத்னம் சரவணன் பிசினஸில் இருக்கிறார். அவருக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. அம்மா லட்சுமிபிரியாவுக்கு பூர்வீகம் நாகர்கோவில். சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். நான் பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப்படிப்பு எல்லாம் சென்னைதான். சிறுவயதில் இருந்து வெஜிடேரியன்தான். நான் வெஜ் சாப்பிட்டதே கிடையாது. கடந்த 2019ம் ஆண்டில் பொலிடிக்கல் சயின்ஸ் படிக்க பிரான்ஸ் போனேன். 4 ஆண்டுகள் அங்கிருந்தேன். அதன்பிறகு லண்டனில் சினிமா சார்ந்த படிப்பு. ரெண்டரை வருடம் அங்கிருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் நான்வெஜ் சாப்பிட ஆரம்பித்தேன். நான்வெஜ் மீது எனக்கு அதிகளவில் ஈடுபாடு வந்தது. வெளிநாடுகளில் நான்வெஜ் சாப்பிட்டது அவ்வளவாக பிடிக்கவில்லை. நம் ஊர் நான்வெஜ் டிஷ்களைச் சாப்பிடுவது அவ்வளவு விருப்பமாக இருந்தது. பல டிஷ்களைத் தேடி தேடிச் சாப்பிட ஆரம்பிப்பேன். நம்ம ஊர் நான்வெஜ் டிஷ்களை தனித்துவமாக தர வேண்டும், அதற்கு நாமே ஒரு ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி உருவானதுதான் மாயா விலாஸ் ‘’ என ரெஸ்டாரென்ட் ஆரம்பித்த கதையோடு பேச ஆரம்பித்த அஜய் விஸ்வநாத், மேலும் தொடர்ந்தார். “ ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னதும் அப்பா, அம்மா இருவரும் சம்மதம் தெரிவிச்சாங்க. அதுவே எனக்கு உத்வேகத்தைத் தந்தது. அப்பா பிசினஸை கவனித்துக்கொள்கிறார். அம்மா எனக்கு உதவியாக இருக்கிறார். பல விஷயங்களுக்கு அவர்தான் வழிகாட்டுகிறார்.

செட்டிநாட்டு உணவுகளை அசல் சுவையோடு தர வேண்டும், அதுவும் தனித்துவமாக தர வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவெடுத்தோம். அதற்கேற்றவாறு ரெஸ்டாரென்டின் இன்டீரியரை வடிவமைத்தோம். பார்க்கும்போது ஒரு செட்டிநாட்டு ஃபீல் வரவேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறோம். யஷ்வின் மேத்யூ என்பவர் இதற்கான ஐடியாக்களைக் கொடுத்தார். பாலச்சந்தர் என்கிற செப் உணவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்கிறார். எனக்கு ஸ்பைசியான சாப்பாடு பிடிக்கும். இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுகள் அப்படித்தான் இருக்கும். இங்கு 4 விதமான பிரியாணிகள் ரொம்ப ஃபேமஸ். சிக்கன் சுக்கா பிரியாணி, மட்டன் சுக்கா பிரியாணி, டைனமைட் பிரியாணி, ப்ரான் தொக்கு பிரியாணின்னு இந்த 4 பிரியாணிக்கும் நல்ல வரவேற்பு. இதில் பாஸ்கெட் பிரியாணி எங்க யுனிக் அயிட்டம். கூடையில் வச்சி பிரியாணி கொடுப்போம். அதுல ஸ்பைசி சிக்கன் கூட மேலும் சில ஐட்டங்களை டாப்பிங்கா வச்சிக் கொடுப்போம். டைனமைட் பிரியாணிக்கும் அம்சமான டாப்பிங் இருக்கும். இது ஆர்டர் பண்றவங்களை சாப்பிடத் தூண்டுற மாதிரி இருக்கும். இதுதவிர மட்டன் தம் பிரியாணி, மட்டன் பொட்டலம் பிரியாணி, சிக்கன் தம் பிரியாணி, சிக்கன் பொட்டலம் பிரியாணி, சிக்கன் 65 பிரியாணி, சிக்கன் கீ ரோஸ்ட் பிரியாணி, சிக்கன் ஸ்பெஷல் போன்லெஸ் டைனமைட் பிரியாணின்னு நிறைய வெரைட்டி இருக்கு. பிரியாணி, ஸ்டாட்டர்ஸ், கோலிசோடான்னு ஒரு சூப்பரான காம்போவும் தருகிறோம்.

பிரியாணி சாப்பிட்டு விட்டு கோலிசோடா சாப்பிடும் ஃபீல் வேற மாதிரி இருக்கும். சூப்பில் ஸ்வீட் கார்ன் சூப், ஆட்டுக்கால் சூப், போன்லெஸ் நண்டு சூப், மட்டன் மிளகு ரசம், கோழி ரசம்னு கொடுக்கிறோம். வெஜ் ஸ்டாட்டர்ஸ்ல கோபி 65, மஷ்ரூம் 65, கோவை காளான் பிரட்டல், சில்லி கோபி டிரை, மஷ்ரூட் சால்ட் அண்டு பெப்பர், டைனமிக் பன்னீர், டிராகன் பன்னீர், டோக்கியோ ஸ்பைசி பன்னீர் என பல வெரைட்டி கொடுக்கிறோம். நான்வெஜ் ஸ்டாட்டர்ஸ்ல செட்டிநாடு சிக்கன் லாலிபாப், மாயாவிலாஸ் சிக்கன் சுக்கா, குண்டூர் சிக்கன், மட்டன் மிளகு வறுவல், டோக்கியோ ஸ்பைசி சிக்கன் என விதம் விதமாக தருகிறோம். இதுதவிர செட்டிநாடு சிக்கன் மீல்ஸ், மதுரை செட்டிநாடு மட்டன் மீல்ஸ்னு 2 டிப்ரண்ட் மீல்ஸ் இருக்கு. சிக்கன் மீல்சில் சாதம், சிக்கன் கறி, சிக்கன் 65, சிக்கன் சுக்கா, ரசம், மோர், பொரியல், அப்பளம், ஆம்லெட், ஸ்வீட் என ஒரு காம்போ தருகிறோம். மட்டன் மீல்சில் சாதம், மட்டன் கறி, மட்டன் நெய் சுக்கா, சிக்கன் 65, மோர், பொரியல், அப்பளம், ஆம்லெட், ஸ்வீட் என காம்போ வரும். இதுதவிர பரோட்டா வெரைட்டி, ப்ரைடு ரைஸ், டெசர்ட்ஸ் என பல வெரைட்டி இருக்கு. நைட் டின்னர்ல ஸ்பெஷலான தோசை வெரைட்டீஸ் இருக்கு. நான்வெஜ் ஃபுட் மேல உருவான ஆர்வத்துல இந்த ஹோட்டலை ஆரம்பித்தேன். அதற்கேற்றவாறு தொடர்ந்து நல்ல ஃபுட் காம்போவாக கொடுத்து வருகிறோம். சாப்பிட வருபவர்களும்
திருப்தியாக செல்கிறார்கள். இந்தத் தொழில் அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கிறது’’ என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

அ.உ.வீரமணி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

Related posts

சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னையில் குழந்தை திருமணம்: 18 புகார்கள் பதிவு

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்