சாலை வளைவுகளில் தடுப்பு அமைக்க வேண்டும்: வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை-தொண்டி சாலையில் அபாயகரமான வளைவுகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை, தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, முதற்கட்டமாக கடந்த 2012ல் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகிலிருந்து காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி வரையிலும், கடந்த 2013ல் ஆண்டிச்சியூரணியிலிருந்து, தொண்டி வரை சாலைபோடும் பணி நடந்து முடிந்தது. சாலையின் இருபுறமும் மேலும் தலா 1.5 மீட்டருக்கு அகலப்படுத்தப்படும் பணி கடந்த 2015ல் நடந்தது. இதில் ஏற்கனவே இருந்த சாலை முற்றிலுமாக அகற்றப்பட்டு, அதன் மீது மண், கற்கள், கான்க்ரீட் கலவை போடப்பட்டு உயர்த்தப்பட்டது. சிவகங்கை-சருகணி இடையிலான சாலையில் பல இடங்களில் தரையிலிருந்து சுமார் 5அடி முதல் 8 அடிக்கு மேல் சாலை உயர்த்தப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்க பணியின்போது சிவகங்கை-சருகணி வரை பல்வேறு இடங்களில் உள்ள அபாயகரமான வளைவுகளை அகற்றி சாலைகளை நேராக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆண்டிச்சியூரணி அருகே மட்டும் வளைவு இருந்த பகுதியில் சாலை நேராக்கப்பட்டது. காட்டுக்குடியிருப்பு அருகே உள்ள நவ்வாக்கண்மாய் வளைவு உள்ளிட்ட பல்வேறு சாலை வளைவுகள் சரி செய்யப்படவில்லை. இந்த வளைவுகள் அபாயகரமானதாகும். இந்த வளைவுகளில் தரைத்தளத்தைவிட பல அடி உயரமாக சாலை காணப்படுகிறது. நவ்வாக்கண்மாய் வளைவில் சாலைக்கும், தரைக்குமான உயரம் சுமார் 8 அடியாக உள்ளது. இதுபோன்ற வளைவுகளில் சிறிது கட்டுப்பாட்டை இழந்தாலும் பள்ளத்திற்குள் லாரி, வேன், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றன. இதனால் உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘விபத்துகளை தடுக்க வளைவுகளை அகற்ற வேண்டும். அல்லது வளைவுகளில் கம்பி தடுப்புகள் அமைக்க வேண்டும். சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்துவிட்டது என காரணம் கூறாமல் உடனடியாக வளைவுகளை அகற்றவோ அல்லது தடுப்புகள் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்