பாரிமுனையில் 4 மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து : உரிய விளக்கம் அளிக்க உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!!

சென்னை: சென்னை பாரிமுனை அருகே நேற்று காலை சீரமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பழமை வாய்ந்த 4 மாடி கொண்ட கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று இடிந்து விழுந்தது. அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நேற்று முழுவதுமாகநீடித்த நிலையில், சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் முழுமையாக அகற்றப்பட்டன.

இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிட உரிமையாளர்கள் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்டிட பழுது பார்க்கும் பணிக்கு முன் அனுமதி பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பணியை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் காரணங்களுக்காக உரிமையாளர்கள் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி