பார்போரா ஜாஸ்மின் பலப்பரீட்சை

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பார்போரா – ஜாஸ்மின் இன்று மோதுகின்றனர். முன்னாள் 2வது ரேங்க் வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (28 வயது, 32வது ரேங்க்), 2021ல் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன். அதே போட்டியின் இரட்டையர் பிரிவிலும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். மொத்ததில் ஒரு முறை ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டமும், 7 முறை 4 கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஒற்றையர் பிரிவில் இடையில் தடுமாற்றத்தில் இருந்தவர், இப்போது விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறி உள்ளார். இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி (28 வயது, 7வது ரேங்க்) இந்த ஆண்டுதான் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார். மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் பைனலில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) உடன் விளையாடி 2வது இடம் பிடித்தார். நடப்பு தொடரில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்பே வெளியேறிய நிலையில், ஜாஸ்மின் தொடர்ந்து அடுத்த கிராண்ட் ஸ்லாமிலும் பைனலுக்கு முன்னேறி உள்ளார்.

இருவரும் இதற்கு முன் ஒரு முறைதான் மோதியுள்ளனர். 2018 ஆஸி. ஓபனில் மோதியதில் பார்போரா 6-2, 6-1 என நேர் செட்களில் வென்றார். இந்த விம்பிள்டனில் ஜாஸ்மின் தன்னை விட தரவரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ள வீராங்கனைகளைதான் வென்றுள்ளார்.

ஆனால், பார்போரா தன்னை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ள ரைபாகினா (4), ஆஸ்டபென்கோ (13), கோலின்ஸ் (11), ஆகியோரை வீழத்தி இருக்கிறார். பைனலிலும் தரவரிசையில் தன்னை விட முன்னிலையில் இருக்கும் ஜாஸ்மின் உடன் மோத இருக்கிறார். பைனலில் வெற்றி பெறுபவருக்கு 2000 தரவரிசைப் புள்ளிகள் மற்றும் ரூ.29 கோடி, 2வது இடம் பிடிப்பவருக்கு 1300 தரவரிசைப் புள்ளிகள், ரூ.15 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும்.

Related posts

ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் வினேஷ் போகத்

வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

லாரியில் ரூ.40 லட்சம் கொள்ளை: 4 தனிப்படை அமைப்பு