வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டால் திமுக அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது: தொல்.திருமாவளவன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டால், திமுக அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதியுடன் பேசினார். செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளின் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை தாங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு திருமாவளவன் உள்பட விசிக நிர்வாகிகள் மவுன அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.

இக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது: நாம் கண்டிப்பாக அனைத்து மதுக்கடைகளையும் மூடமுடியும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஒருசிலர், நாம் இதை தேர்தல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்கிறோம் எனக் கூறுகின்றனர். அவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு கவலையில்லை. மதுபோதையால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றவே இப்போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்ற நோக்கில் விலகக்கூடாது. இந்த மது ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதன் மூலம் எந்த விளைவுகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். நாம் திமுகவினரை நேரடியாக எதிர்க்காமல், தேசிய கொள்கை என பூசி மெழுகுவதாக ஒருசிலர் கூறுகின்றனர். நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ள, அவர்களிடம் சக்தி தேவை. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை திமுக அரசு மூடி, வரலாற்றில் நல்ல பெயரை எடுத்து, நிலையான வெற்றி பெறவேண்டும்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டால், எத்தனை பேர் வந்தாலும் திமுக அரசை ஒன்றும் செய்துவிட முடியாது. அதன்பிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெறும். இதில் எங்களுக்கு என்ன எனக் கேட்பவர்களுக்கு, விசிக போராட்டத்தினால் அனைத்து மதுக்கடைகளையும் அரசு மூடினால் எங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கும். அதுதான் நமக்கு கிடைக்கும் வெற்றி. இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி உறுதி தெரிவித்தார்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.