தனியாக வசிக்கும் வங்கி அதிகாரி வீட்டில் புகுந்து சொத்து பத்திரம், நகை, பணம் திருட கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர்: 3 பேர் கைது

வேளச்சேரி: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் புகுந்து சொத்து பத்திரங்கள், நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருட கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர் உட்பட 3 பேரை அடையாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடையாறு, காமராஜர் அவென்யூ, 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (80). இவர் எஸ்பிஐ வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்ட நிலையில், ரவிச்சந்திரன் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இவர், கடந்த 6ம் தேதி, வழக்கம்போல் வீட்டு வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர், திடீரென அவரது வாயை பொத்தி, வீட்டுக்குள் இழுத்து சென்றனர். அப்போது அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் மற்றும் மேல் வீட்டில் குடியிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் தப்பிய நபர்களின் பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், அசோக் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது பைக் என்பது தெரிந்தது.

அவரை தேடியபோது, தலைமறைவானது தெரிந்தது. இதையடுத்து, சம்பவத்தன்று அவர்களுடன் வந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தபோது, தனது தாய் மாமா கார்த்திக் அழைத்தத்தின் பேரில் வந்ததாகவும், தனக்கு வேறு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து சிறுவனை கெல்லீசில் உள்ள சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த மாதவரத்தை சேர்ந்த முருகன் (37), பிரகாஷ் (35) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது அடையாறு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிரீத்தா (50) என்பவர் தான், தங்களை அனுப்பி, தனியாக வசிக்கும் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து சொத்து பத்திரங்கள், நகை, பணத்தை எடுத்து வரும்படி கூறினர், என தெரிவித்தனர். இதையடுத்து பிரித்தாவையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஆள் கடத்தி கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டதால், வக்கீல் தொழில் செய்ய கோர்ட் தடை விதித்தது தெரிய வந்தது. பின்னர் 3 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்