தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கிகடன், சான்றிதழ், பணி நியமன ஆணைகள், விருதுகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு வகையான வங்கிக்கடன், சான்றிதழ், பணி நியமன ஆணைகள், விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வழங்குகிறார். கலைஞரால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989ம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் நகர்ப்புரங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புரங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம், பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்