வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை விற்க முயற்சி கேரள டிஜிபி மனைவியின் நிலம் ஜப்தி: திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் ஷேக் தர்வேஷ் சாகிப். இவரது சொந்த ஊர் ஐதராபாத் ஆகும். கடந்த வருடம் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி ஷேக் பரிதா பாத்திமாவின் பெயரில் திருவனந்தபுரம் பேரூர்க்கடை அருகே 10.8 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ₹74 லட்சத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்து திருவனந்தபுரத்தை சேர்ந்த உமர் ஷெரீப் என்பவருடன் கடந்த வருடம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது முன்பணமாக ₹30 லட்சத்தை உமர் ஷெரீப், டிஜிபியிடம் கொடுத்துள்ளார். இரண்டு மாதங்களில் நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நிலம் வங்கியில் ₹26 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக உமர் ஷெரீப்புக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடைய பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று டிஜிபியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பல மாதங்களாகியும் முன்பணம் திருப்பிக் கிடைக்காதால் உமர் ஷெரீப் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிபுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், டிஜிபியின் மனைவிக்கு சொந்தமான 10.8 சென்ட் நிலத்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டது. பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய முடியும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புக்கு கேரள அரசு ஒரு வருடம் பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்