வங்கதேசத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மருத்துவ மாணவிகள் முதல்வருக்கு நன்றி

கிருஷ்ணகிரி: வங்கதேசத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மருத்துவ மாணவிகள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். வங்கதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலவரம் வெடித்து, 130க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பதற்றத்தை தணிக்க வங்கதேச ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் படிக்க சென்று தவித்த இந்திய மாணவ-மாணவிகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 49 மாணவ-மாணவிகள் பத்திரமாக நாடு திரும்பினர். இதில், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்த ப்ரீதா வாசுதேவன் (25, பயிற்சி மருத்துவர்), இறுதியாண்டு மாணவிகளான கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிதி ராமமூர்த்தி (23), ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த தக்சண்யா ஜேம்ஸ் (22) மற்றும் கிருஷ்ணகிரியில் 4 பேர், டேம்ரோடு பகுதியில் இருவர், இருமத்தூரில் ஒருவர், போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் அடங்குவர்.

கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் ப்ரீதா வாசுதேவன், நிதி ராமமூர்த்தி, தக்சண்யா ஜேம்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் வங்கதேசத்தில் உள்ள சிலேட் மகளிர் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறோம். எங்கள் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. நாங்கள் தங்கியுள்ள ஹாஸ்டலில் உணவு கூட வழங்கப்படவில்லை. கடந்த இரு நாட்களுக்கு முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் மொபைலில் மட்டும், அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது.

அந்த மொபைல் மூலம் 60 மாணவிகளும், தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர். டி.வி.யில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு, இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விபரங்களை மட்டும் கேட்டனர். அதன் பின்னர், தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விபரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர். மூன்று நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கிய எங்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கும், குறிப்பாக விமான கட்டணம், உணவு, எங்கள் வீடு வரை பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு