வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃப் பின் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

டாக்கா: வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃப் பின் மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கில் இருந்து முன்னாள் வங்காளதேச கிரிக்கெட் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அங்கு நிலவி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் முர்தாசாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.

வீட்டிற்கு தீ வைப்பதற்கு முன், வீடு அடித்து நொறுக்கப்பட்டதோடு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் மஷ்ரஃபே முர்தாசா வங்கதேசத்தில் உள்ள நரைல்-2 தொகுதியின் எம்.பி. ஆவார். முர்தாசா இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக நரைல்-2 தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முர்தாசாவின் வீட்டிற்கு தீ வைத்ததோடு, மாவட்டத்தில் அமைந்துள்ள அவாமி லீக் அலுவலகத்திற்கும் வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அதே மாவட்டத்தில் கட்சியின் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நாராயண்கஞ்ச்-4 தொகுதியிலும், அவாமி கட்சியுடன் தொடர்புடைய பல தலைவர்களின் வீடுகளிலும் கொள்ளை மற்றும் நாசவேலைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுபுறம், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவரது அதிகாரப்பூர்வ இல்லம் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

சேலம் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!!

தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’